தென்மாவட்டங்களின் சந்திப்பு மையமாக இருக்கும் மதுரையில் கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. இரண்டு தினங்களுக்கு முன்பு மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, சோதனை செய்வதில் மாநிலத்தில் முப்பதாவது இடத்தில் மதுரை இருக்கிறது. இது மதுரை மக்களுக்குப் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மதுரையைவிடக் குறைந்த மக்கள்தொகையைக்கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட சோதனையின் எண்ணிக்கையில் சரிபாதிதான் மதுரையில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து வருபவர்களில் நோய்த்தொற்றுக்கான அறிகுறி இருப்பவர்கள், அறிகுறி இல்லாதவர்கள் என அனைவரையும் சோதனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 31-5-2020 அன்று பிறப்பித்த உத்தரவிலே (G O.Ms.No;226 ) குறிப்பிட்டுள்ளது.கடந்த பத்து நாள்களாக சென்னையிலிருந்து மதுரைக்கு வந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் இருபதாயிரம் இருக்கும் என்று இன்றைய நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இதில் முறையான அனுமதிச்சீட்டு பெற்று வந்துள்ளவர்களின் முழுவிபரமும் நிர்வாகத்திடம் இருக்கிறது. இவர்களுக்குக்கூட சோதனையை மேற்கொள்ள எந்தவொரு நடவடிக்கையும் இப்பொழுதுவரை எடுகப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வருகிறவர்களை சோதனைக்கு உட்படுத்தி ஒரு வாரம் தங்கவைத்து மீண்டும் சோதனைக்கு உட்படுத்தி, அவர்களுக்கு தொற்றுப்பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்புதான் அவர்களின் வீடுகளுக்கு அனுப்ப வேண்டும். அதன் பின்பும் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் 7 நாள்கள் கோரண்டைனில் இருக்க வேண்டும். அதற்கான வசதி அவருக்கு இல்லையென்றால் மாவட்ட நிர்வாகம் அடுத்த ஏழு நாள்களும் அவரை தனது பொறுப்பில் தங்கவைக்க வேண்டும் என்று தமிழக அரசு 18-5-20ஆம் நாள் (G O.Ms No;219) உத்தரவிட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி துபாயிலிருந்து மதுரைக்கு 27 பேர் வந்துள்ளனர். இவர்கள் முதலில் சோதனை செய்யப்படுள்ளனர். ஒரு வாரம் தங்கவைக்கப்பட்ட பின், நேற்று மீண்டும் சோதனை எதுவும் நடத்தப்படாமல் வீடுகளுக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளனர்.யாருடைய உத்தரவின் பெயரில் இவை எல்லாம் நடக்கின்றன? தமிழக அரசின் உத்தரவுகளை முற்றிலுமாகக் கைவிடும் நிலையில் மதுரை இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. வருமுன் காக்க வேண்டிய நடவைக்கைகளை, போர்க்கால அடிப்படையில் ஓரிரு நாள்களுக்குள் எடுக்கவில்லையென்றால் தூங்காநகரம் துயரம் மிக்க நகரமாக மாறிவிடக்கூடும்.இது சம்பந்தமாக இன்றுகாலை மாநில அரசின் தலைமைச் செயலாளரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்தையும் கோருகிறேன். உடனடியாகத் தலையிடுங்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.