அய்யா வைகுண்டர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மார்ச் 04 அன்று தமிழகம் முழுவதும் மதுக் கடைகளை மூட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது பற்றிய அவரது அறிக்கையில், வள்ளலார், புத்தர், மகாவீரர் போன்ற மகான்களின் வழியில் சமுதாய மறுமலர்ச்சிக்காக தொண்டாற்றிய அய்யா வைகுண்டர் பிறந்தநாள் மாசி திங்கள் 20 (மார்ச் 4) ஆம் தேதி அன்று கொண்டாடப்பட இருக்கிறது. வைகுண்டர் வழியில் இயங்கி வரும் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். வைகுண்டர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் விடுமுறை என்ற அறிவிப்பினை வெளியிடவும், அய்யா வைகுண்டர் வலியுறுத்திய மதுவிலக்கு கொள்கைக்கு மதிப்பளிக்கும் வகையில், அவரது பிறந்தநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுவதற்கு அறிவிக்குமாறும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment.