தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழக முதல் அமைச்சருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த அறிக்கையில், தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம், பாவூர்சத்திரம் பகுதி கல்வியிலும், வர்த்தகத்திலும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. கீழப்பாவூர் பேரூராட்சி, குலசேகரப் பட்டி, கல்லூரணி ஊராட்சிகள் உட்பட நூற்றுக் கணக்கான கிராமங்களுக்கு மையப் பகுதியாக பாவூர்சத்திரம் விளங்கி வருகிறது.
இவ்வட்டாரத்தில் உள்ள 11 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல் நிலைப் பள்ளிகளில் படித்து முடித்து வெளி வரும் சுமார் 2500 மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர்ந்து உயர் கல்வி பெறுவதற்கு ஏற்ற கலைக் கல்லூரி வசதிகள் இல்லை. இருக்கின்ற சில கல்லூரிகளில் சேர்வதற்கு சென்றாலும் அக்கல்லூரிகளில் அங்கீகரிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கையை விட கூடுதலாக மாணவர்கள் சேர்ந்து விடுவதால், இப்பகுதி மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு கிடைக்காத நிலையும், இதனால் மேல்படிப்பு தடைபடும் நிலையும் உள்ளது.
உயர் கல்வி வாய்ப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், முனைப்பாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பாவூர்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதி மாணவச் செல்வங்கள் பயன்பெறும் வகையில் பாவூர்சத்திரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கலைக் கல்லூரி ஒன்றை உருவாக்கித் தர ஆவன செய்ய வேண்டும். கல்லூரிக்குத் தேவையான அரசு நிலம் அங்கு உள்ளது என்பதையும் அரசின் கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.