திருவள்ளுவருக்கு மதச்சாயம், தமிழக மக்களை கொதித்து எழச் செய்யும். வைகோ எச்சரிக்கை.!

சென்னையில் சாலை விதிகளை மீறுவோருக்கு, போக்குவரத்துக் காவல்துறை வழங்கும் ரசீதுகளில் இந்தி, ஆங்கில மொழி மட்டுமே இடம் பெற்று இருக்கிறது.

இந்தி மொழி இடம் பெற்ற அபராத ரசீதுகளை மத்திய அரசின் தேசிய தகவல் மையம் வடிவமைத்து, அதனை தமிழகத்தில் பயன்படுத்திட உத்தரவிடப்பட்டிருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்புக்கு அ.இ.அ.தி.மு.க. அரசும் துணையாக இருக்கிறது.

முற்றிலும் தமிழைப் புறக்கணித்துவிட்டு அபராத ரசீதுகளைத் தயாரித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். தமிழக மக்கள் இச்செயலை மன்னிக்கவே மாட்டார்கள்.

பிரதமர் மோடி, அவ்வப்போது தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றிக் கொண்டே இருக்கும்போது, இன்னொரு பக்கத்தில் தமிழ் மொழியை அழிக்கும் செயலில் பா.ஜ.க அரசு ஈடுபட்டு இருப்பதன் மூலம் பா.ஜ.க. வின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கடந்த செப்டம்பர் 14 இல் இந்தி நாளில், இந்திதான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொக்கரித்திருந்தார்.

இத்தகைய சூழலில், தமிழக அரசு இந்தியை நடைமுறைப்படுத்தத் தீவிரம் காட்டும் செயல் தமிழ் நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும். எனவே தமிழக அரசு இந்தித் திணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற மனிதத் தத்துவத்தை நிலைநாட்டிய திருக்குறள், உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. நாடு, மொழி, இன, மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் பின்பற்றக் கூடிய வாழ்வியல் நெறியை போதிப்பதால்தான் திருக்குறள் மனித சமூகத்தின் வழிகாட்டும் நூலாகத் திகழ்கின்றது.

லத்தீன், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பு திருக்குறளுக்குத்தான் இருக்கிறது. எனவேதான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று மகாகவி பாரதி பொருத்தமாகப் பாடினார்.

அத்தகைய திருக்குறளைத் தந்த ‘செந்நாப் போதார்’ திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து, மதச் சாயத்தைப் பூசி பா.ஜ.க. டிவிட்டரில் படம் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரிய செயலாகும்.

திருக்குறள் நெறியை இந்துத்துவ ‘சிமிழுக்குள்’ அடக்க நினைக்கும் மதவாத சனாதன சக்திகளின் இதுபோன்ற பண்பாடற்ற செயல்பாடுகளை பா.ஜ.க. நிறுத்தாவிடில், தமிழக மக்கள் மென்மேலும் கோபாவேசமாய் கொதித்து எழுந்து தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று என்று தெரிவித்துக்கொள்கின்றேன்.

வைகோ பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை – 8 04.11.2019

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!