மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கே.வரதராஜன் மறைவு:-வைகோ இரங்கல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கே.வரதராஜன் மறைவு:-வைகோ இரங்கல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் கே.வரதராஜன் அவர்கள் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

கட்டுமானத்துறை வரைவாளர் படிப்பை முடித்து, நெல்லை மாவட்டம் – பாளையங்கோட்டையில்தான் பொதுப்பணித்துறையில் சேர்ந்து பணியாற்றினார். நெல்லை மாவட்டத்தில் அவர் பணியாற்றிய நேரத்தில்தான் பொதுஉடமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அரசுப் பணியிலிருந்து விலகி, முழு நேரக் கட்சித் தொண்டரானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி வட்டக்குழு செயலாளர் முதல் அரசியல் தலைமைக் குழு வரையில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராகவும், அதன்பிறகு அகில இந்திய விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பினை ஏற்று, விவசாயிகளுக்காகப் போராடினார். இந்திய விவசாயிகளின் வாழ்வில் நம்பிக்கைச் சுடரை ஏற்றுவதற்குப் பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வழி நடத்திய பெருமைக்குரியவர்.

பொதுஉடமை இயக்கத்தில் இளைஞர்களை ஈர்ப்பதற்குப் பயிற்சிப் பாசறைகள் நடத்திய தோழர் கே.வி. அவர்கள், சீரிய சிந்தனையாளர். அவரது ‘தத்துவ தரிசனம்’ உள்ளிட்ட பல நூல்கள் காலத்தால் அழியாதவை.

தோழர் கே.வரதராஜன் அவர்களின் இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய விவசாயிகள் சங்கத்துக்கும் ஈடு செய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ பொதுச்செயலாளர் மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை -8

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!