மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத் தொகை, உணவுப் பொருட்கள் வழங்கி காப்பாற்றுக! தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்…
கொரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டிருக்கிற ஊரடங்கின் காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத் தொகை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கி காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு கடந்த 28 நாட்களாக அமலில் இருந்து வருகிறது. அனைத்துப்பகுதி மக்களும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகம் முழுவதுமுள்ள மாற்றுத்திறனாளிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை எதுவும் தமிழ்நாட்டிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கப் பெறவில்லை.
தமிழக அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணத் திட்டங்கள் அறிவித்துள்ள போதிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த நிவாரணத் திட்டமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் பசி, பட்டினியோடு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் உடல்ரீதியாக பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலைமையை தாங்கள் அறிந்ததே. இதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திரம் வழங்கப்படும் ஓய்வூதியமும் கடந்த சில மாதங்களாக வழங்கப்படவில்லை.
எனவே, மாற்றுத்திறனாளிகளை இப்பெரும் சோகத்திலிருந்து காப்பாற்றிட மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாயும், உணவுப் பொருட்களும் இலவசமாக வழங்கிட வேண்டும்.
உதவிகோரும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்வதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உதவி எண் ஒன்று துவங்கப்பட்டிருந்தாலும், அந்த இணைப்பு முறையாகச் செயல்படுவதில்லை. அப்படியே தொடர்பு கிடைத்தாலும் உரிய பதில் ஏதும் கிடைப்பதில்லை என்று மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர். எனவே, இப்பிரச்சனையை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தத் தொகை கிடைத்தால் மட்டுமே இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகள் வாழ முடியுமென்பதோடு, இவர்களது அன்றாட மருத்துவத் தேவைகளையும் ஈடு செய்ய முடியும். மத்திய அரசு வழங்குவதாக அறிவித்துள்ள நிவாரண உதவிகளையும் தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கு பெற்றுத் தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









