ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான வாரச் சந்தை, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலேயே ரூ. 65.11 லட்சத்திற்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
இந்தச் சந்தை மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய வணிக மையமாக இருந்தாலும், மின்சார வசதி, கொட்டகைக் கட்டிடம், கழிப்பறை, மற்றும் குடிநீர் வசதிகள் போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, மழைக் காலங்களில் சந்தைக்கு வருவது சவாலாக உள்ளது.
இன்று திருவாடானை பெரிய கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 15க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பொது ஏலத்தில் அதிகபட்சமாக ரூ. 59 லட்சம் கேட்கப்பட்ட நிலையில், டெண்டர் பெட்டியில் ரூ. 65.11 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம், ஏற்கெனவே சந்தையை நடத்தி வந்த செந்தில் என்பவருக்கே மீண்டும் சந்தை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஏல வருவாயைக் கொண்டு சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வியாபாரிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, மின்விளக்குகள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், சாலை வசதிகள் மற்றும் சுகாதாரத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
You must be logged in to post a comment.