மண்டபம் அகதிகள் முகாமில் 4 குழந்தைகளுடன் தம்பதி மாயம்.. வெளிநாடு தப்பினார்களா… போலீஸ் விசாரணை…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. தற்போது இங்கு 350க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1,700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு தமிழ்நாடு சிறப்பு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அகதிகளின் அன்றாட நடவடிக்கைகள் நுழைவு வாயில் முன் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. அகதிகளை சந்திக்க விரும்பும் உறவினர்கள் தனி துணை ஆட்சியரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். வெளியூர் செல்ல விரும்பும் அகதிகள் போலீசார், தனித்துணை. ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணம் உதய கலா, தயாபர ராஜ் தம்பதி 3 பெண் குழந்தைகளுடன் விமானம் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்தனர். விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, மண்டபம் அகதிகள் முகாமில் தங்கிய இவர்களது குடும்பத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. உடல் நலம் பாதித்த கணவருக்கு மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு உதய கலா அழைத்துச் சென்றார். இந்நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 4 குழந்தைகளுடன் வசித்த இவர்கள் , மே 20 ஆம் தேதி முகாமை விட்டு வெளியேறி, ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் வசித்தனர். உதய கலா, தயாபரராஜ் முகாமிற்கு மீண்டும் திரும்பாததால் ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் சென்று பார்த்த போது குடும்பத்துடன் மாயமானது தெரிந்தது. இது குறித்து தனித்துணை தாசில்தார் (குடியிருப்புகள் பிரிவு) ரவி போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி மண்டபம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். உதய கலா, பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தன் மீது பண மோசடி புகார் கொடுக்கப் போவதை அறிந்த உதயகலா 4 குழந்தைகள் மற்றும் கணவருடன் மாயமான தெரிகிறது. போலி பாஸ்போர்ட்டில் ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!