கொரானாவிடமிருந்து மட்டுமல்ல எச்.ராஜாவிடமிருந்தும் விலகியிருப்பதே நன்மைபயக்கும்:–“மக்கள் நீதி மய்யம்” மாநில செயலாளர் அறிக்கை.
கடந்த சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் “மக்கள் நீதி மய்யம்” கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தனது திரையுலக, அரசியல் அனுபவங்களை நடிகர் விஜய் சேதுபதி அவர்களோடு கலந்துரையாடிய போது அவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் “சினிமா என்பது டிக்கெட் போட்டு விற்பனை செய்யும் வியாபாரம் தானே…? அது தர்மத்திற்கு பாடும் பாட்டில்லையே…? தியாகய்யர் ராமரை போற்றி தஞ்சாவூர் வீதிகளில் பிச்சை எடுத்து கலை வளர்த்தது மாதிரி நாம தர்மத்துக்கு பண்ணலையே..?, நமக்கு கார் வாங்கனும், எம்ஜிஆர், சிவாஜி மாதிரி ஆகணும் ஆனா மக்களை மகிழ்விக்க மாட்டேன்னா அதென்ன வீம்பு..? என பதிலளித்திருந்தார். இதில் சினிமா என்பது 100% லாப நோக்கோடு கூடிய வணிகம். ஆனால் தியாகய்யர் தர்மசிந்தனையோடு ராமரை போற்றி புகழ்ந்து பாடி கலை வளர்த்தார் என்பதாகத் தான் நம்மவரின் பேச்சு அமைந்திருந்தது.
சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையானவராக போற்றப்படும் தியாகய்யர் தஞ்சை வீதிகளில் ராமரை போற்றி புகழ்ந்து கலை வளர்த்ததை பெருமையாக சொன்ன நம்மவரின் வார்த்தைகளில் இடைப்பட்ட “பிச்சை எடுத்து” என்பதை மட்டும் பிடித்துக் கொண்டு “சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையானவர் தியாகய்யரை இழிவாகப் பேசியுள்ள கமல்ஹாசனின் அநாகரீகச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என நம்மவரை கண்டிப்பதாக இன்று (06.05.202 தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜகவின் எச்.ராஜாஅவர்கள் தான் அரைவேக்காடு என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்திருக்கிறார்.
மேலும் கொரானா ஊரடங்கு நேரத்தில் உலகமே அமைதியாக அடங்கியிருக்கும் நேரத்தில் ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்யவும், அரசியல் என்கிற பெயரில் பிரியாணி அண்டாவை திருடவும் வாய்ப்பில்லை என்பதால், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் திரியும் எச்.ராஜா அவர்கள் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் பேச்சை வைத்து தனது அரசியல் சித்து விளையாட்டை ஆட நினைக்கிறார். ஆனால் அவரது ஆட்டம் எடுபடாது என்பது அவருக்கே நன்றாக தெரியும்.
அத்துடன் தியாகய்யர் குறித்து பிராமண சமுதாயத்தினர் மத்தியில் பேசினால் நம்மவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விடலாம் என்கிற நோக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோரின் முழுமையான கலந்துரையாடலை பதிவிடாமல் தனக்கு சாதகமான பகுதியை மட்டும் கத்தரித்து மிகவும் இழிவான செயலை செய்திருக்கிறார். உண்மையில் அவருக்கு திராணியிருந்தால் அந்த காணொளியின் முழுமையான பகுதியை வெளியிட்டடும் பார்க்கலாம்.
எனவே அமைதியாக இருக்கும் மக்கள் மத்தியில் மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் தொடர்ந்து அரசியல் செய்து அதன் மூலம் ஆதாயம் அடைய முற்படும் எச்.ராஜாவிற்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தற்போதைய சூழலில் கொரானாவெனும் கொள்ளை நோயிடமிருந்து மட்டுமல்ல, அதை விட ஆபத்தான தனது அரசியல் விளம்பரத்திற்காக குள்ளநரி வேலை செய்து மக்களிடையே பிரிவிணையை தூண்டி வரும் எச்.ராஜாவிடமிருந்தும் மக்கள் விலகியிருப்பதே நம் மனித சமூகத்திற்கு நன்மை பயக்கும்.
நன்றி
- சு.ஆ.பொன்னுசாமி (மாநில செயலாளர்) “மக்கள் நீதி மய்யம்” தொழிலாளர்கள் அணி.


You must be logged in to post a comment.