மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.இந்நிலையில், மாலேகான் நகருக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று நம்பூர் சாலையில் உள்ள திருமண மண்டப அலுவலகத்திற்குள் நுழைந்தது.
அந்த அலுவலகத்தின் கதவு திறந்து இருந்ததால் வாசல் வழியாக சிறுத்தை உள்ளே நுழைந்த நிலையில், அங்கு அலுவலக கேபினில் மோகித் விஜய் அகிரே (13), என்ற சிறுவன் தனது செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான்.அலுவலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை, கேபினில் இருந்த சிறுவனை பார்க்காமல் நேராக உள் அறைக்குச் சென்றது. சிறுத்தையை பார்த்தும் சிறிதும் அச்சப்படாத அந்த சிறுவன் அலுவலகத்திற்கு வெளியே சென்று கதவை வெளியில் இருந்து மூடினான். இந்தச் சம்பவம் காலை 7 மணி அளவில் நடந்துள்ளது.சிறுத்தை புகுந்தது குறித்து வனத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை, மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை கூண்டில் ஏற்றிச்சென்ற பிறகே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.திருமண மண்டபத்தின் அலுவலக அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை அலுவலகத்திற்குள் நுழைவதும், உடனே சிறுவன் அசால்டாக வெளியே சென்று பூட்டு போட்டு பூட்டுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. துணிச்சலாக செயல்பட்ட சிறுவனின் சாதுர்யத்தைப் பாராட்டி பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment.