இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மதுரை செல்லூர் பீ.பீ.குளம் அருகில் உள்ள முல்லை நகர்ப் பகுதியில் சுமார் 575 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையாக, திடீரென மாவட்ட நிர்வாகம் அப்பகுதி மக்களை காலி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதால் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 575 குடும்பங்களில் 160க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசின் குடிசை மாற்று வாரியம் அளித்த அங்கீகரிக்கப்பட்ட வீட்டடி மனைகளைப் பணம் செலுத்திப் பெற்று, அதில் கடன் வாங்கி வீடு கட்டியவர்கள் ஆவர். இவர்கள் மாநகராட்சி வரி, பாதாளச் சாக்கடை வரியைக் கட்டியுள்ளதோடு அப்பகுதியில் பிஎஸ்ஓபி வீட்டுக் கடன் திட்டத்திலும் கடன் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பலரும் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டி தவணை செலுத்தி வருகின்றனர். இப்பகுதியில் பீ.பீ.குளம் கண்மாய் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தாலும், தற்பொழுது 3 ஏக்கர் பரப்பளவிற்குத்தான் கண்மாய் உள்ளது. அந்த 3 ஏக்கர் கண்மாய்க்கு 3 வாய்க்கால்கள் வழியாக சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் நீர் வந்திருந்தாலும் கடந்த 25 ஆண்டுகளாக முழுமையாக மூடப்பட்டு அதில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கண்மாயைத் தூர்வார மதுரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தவறியதின் காரணமாகச் சமீபத்தில் மதுரையில் பெய்த மழையால் மாவட்ட நிர்வாகத்திற்குப் பிரச்சனைக்குரிய பகுதியாக இந்த கண்மாய்ப்பகுதி மாறிவிட்டது. முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இந்த பகுதியில் உள்ள மக்கள் காலி செய்யப்படவேண்டும் என்றும், மாற்று இடத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டுமென்றும் ஆணையிட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டின் நவம்பர் மாதம் தொடக்கம் வரையில் இவ்விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் தரப்பில் எடுக்கப்படாத நிலையில், திடீரென கடந்த திங்கள் கிழமை அப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளையும் காலி செய்யவேண்டுமென்ற அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது. திடீரென மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அந்த பகுதியில் குடியிருக்கும் அனைத்து மக்களும் அவர்களது தெருக்களிலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகவே, இதுதொடர்பாக தமிழக அரசு அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சனையில் அரசு சிறப்புக் கவனம் செலுத்த முயற்சி எடுத்து வீடுகளைக் காலி செய்வதைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ளவேண்டும். மக்களின் கோரிக்கை படி பீ.பீ.குளம் கண்மாய் அமைந்துள்ள மதுரை வடக்கு வட்டம் சர்வே எண்.23ல் தற்போது நீர்நிலையாக இருக்கும் பகுதியை மட்டும் பாதுகாத்து, மக்கள் வசிக்கும் பகுதியை வகை மாற்றம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 575 குடும்பங்களைப் பாதிக்கும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையில் தமிழக முதல்வர் தலையிட்டு, மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் போராடுகின்ற மக்களுக்கு எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.