தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளோம் என மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்..
மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவராக இருந்தவர், ராஜபாண்டி (அ.தி.மு.க.). அதேபோல, தி.மு.க. ஆட்சி காலத்தில் மண்டலத்தலைவராக இருந்தவர் வி.கே.குருசாமி. இவர்கள் மதுரை காமராஜர்புரம் பகுதியில் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கிடையே, பல வருடங்களாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக இருதரப்பைச் சேர்ந்த ஆதரவாளர்களும் அடிக்கடி மாறி, மாறி மோதலில் ஈடுபட்டு வந்தனர். இதனால், பழிக்குப்பழியாக 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.
இதன் காரணமாக, இருதரப்பைச் சேர்ந்தவர்களும் மதுரை மட்டுமின்றி பல இடங்களில் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜபாண்டியின் கூட்டாளிகள் 5 பேர் மதுரை சிக்கந்தர்சாவடி, மந்தையம்மன் கோவில் தெற்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக, மதுரை மாநகர
போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து செல்லூர் போலீசார் அவர்களை பிடிப்பதற்காக சிக்கந்தர்சாவடியில் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் உள்ளே வந்தால் சுட்டு விடுவோம் என்று மிரட்டினார்கள். உடனே போலீசார் வீட்டின் உள்ளே புகுந்த போது, ரவுடிகள் கள்ளத்துப்பாக்கியால் சுட முயன்றது.
அப்போது போலீசார் தங்களை காத்துக் கொள்ள துப்பாக்கியால் ரவுடிகளை சுட்டனர். இதில் கார்த்திக் என்ற சகுனி கார்த்திக் (வயது 28), மந்திரி என்கிற முத்து இருளாண்டி(30), என்ற 2 ரவுடிகள் குண்டு பாய்ந்து பலியானார்கள். இந்த சம்பவத்தில் இன்னொரு ரவுடியான மாயக்கண்ணன் என்பவன் காயத்துடன் தப்பி ஓடி விட்டான். அவனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
ரவுடிகள் நடத்திய தாக்குதலில் செல்லூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பாலமுருகன் என்பவர் காயம் அடைந்தார். அவர் மதுரை பெரிய
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று மாலையில் போலீசார் நடத்திய இந்த என்கவுண்ட்டர் சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சுட்டுக்கொல்லப்பட்ட இருவர் உடல்களும் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இன்று வாடிப்பட்டி மாஜிஸ்திரேட் விக்னேஷ் மதுவின் மேற்பார்வையில் சிக்கந்தர் சாவடியில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடிகள் 2 பேரின் பிரேத பரிசோதனை தொடங்கியது.
அதே சமயம் அளித்த வாக்குறுதியை மீறி இருவரையும் போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்தபின் குடும்பத்தினருக்கு போலீசார் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. உயிரிழந்தவரின் உடல்களை பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை. போலீசார் ஆஜர்படுத்துமாறு கூறியதால்தான் இருவரையும் வீட்டுக்கு வரவழைத்தோம். என முத்து இருளாண்டியின் சகோதரி சித்திரைச்செல்வி கூறி உள்ளார்.
மதுரையில் 2 ரவுடிகள் என்கவுன்டர் தொடர்பாக டிஜிபி, மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி, மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார் எஸ்.பி.மணிவண்ணன். துப்பாக்கிச்சூடு பற்றி வாடிப்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரையில் 2 ரவுடிகளை என்கவுன்டர் செய்த 2 காவல் அதிகாரிகளின் துப்பாக்கிகளை விசாரணைக்காக அலங்காநல்லூர் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் கூறியதாவது:- முத்து இருளாண்டி மனைவி முத்துலட்சுமி மற்றும் ரவிச்சந்திரனிடம், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது .
முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் இருவரையும் ஏற்கனவே கைது செய்து சுட்டுக் கொன்றோம் என்ற குற்றச்சாட்டு தவறு. என்கவுன்டர் தொடர்பான விசாரணை அதிகாரியாக சமயநல்லூர் டி.எஸ்.பி. மோகன்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். செல்லூர் போலீஸ் தனிப்படை இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ் பெக்டர் முருகன் ஆகிய இருவர் மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளனர்.
தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். சிக்கந்தர் சாவடி சம்பவத்தில் குற்றவாளியிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை மட்டும் வைத்துக் கொண்டு மதுரையில் துப்பாக்கி கலாச்சாரம் இருப்பதாக பொருள் கொள்ளக்கூடாது. என கூறி உள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









