அதிமுக முன்னாள் அமைச்சரின் பிடியில் பரவை பேரூராட்சி: நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..

அதிமுக முன்னாள் அமைச்சரின் பிடியில் பரவை பேரூராட்சி: நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..

ஆளும் கட்சியாக திமுக இருந்தும் முழுமையாக அதிமுக பிடியில் சென்று விட்ட பரவை பேரூராட்சியில், எதிர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வங்கி பாதிப்பை ஏற்படுத்தும் என, பேரூராட்சியைச் சார்ந்த திமுக கவுன்சிலர்கள் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளனர். எப்படியாவது இந்த தகவலை தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்தில், மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியாக இருக்கிறது. பரவை பேரூராட்சி. இங்கு கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக சார்பில் ஏழு கவுன்சிலர்கள் வெற்றி பெற்று பொறுப்பில் உள்ளனர். ஆனால், பேரூராட்சியின் தலைவராக இருக்கும் கலா மீனா என்பவர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு வேண்டிய பரவை ராஜா என்பவரின் மனைவியாவார். மேலும், இந்த மேற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பேரூராட்சி திமுக கவுன்சிலர்களை மிரட்டுவதோடு, ஆளும் கட்சிக்கு எந்த ஒரு நற்பெயரும் கிடைத்து விடாத படிக்கு தலைவர், செயல் அலுவலர் உள்ளிட்ட நிர்வாக அமைப்பை மாற்றி செயல்பட வைக்கிறார். இதனால், இந்த பேரூராட்சியில் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிற செயல் அலுவலர் மட்டுமே பதவியில் இருக்க முடியும். இதுவரை அப்படி செயல்படாத செயல் அலுவலர்கள் யாரும் இங்கு பதவியில் நீடித்த வரலாறு இல்லை. அதனால், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பேரூராட்சி உதவி இயக்குனராக இருந்த சேதுராமன் என்பவர் அதே பதவியில் தொடர்வதாலும், பேரூராட்சி மதுரை மண்டலஅலுவலகத்தில் தலைமை பொறுப்பில் இருந்த செல்வகுமார் என்பவர் பரவை பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வருவதால் முழுவதுமாக பேரூராட்சியின் செயல்பாடுகளில் அதிமுகவினரே தலையிடுகின்றனர். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ போடும் உத்தரவு மட்டுமே இங்கு செல்லுபடி ஆகிறது. நியாயமாக மற்ற கவுன்சிலர்களின் பகுதிகளுக்கு செய்யப்பட வேண்டிய திட்ட பணிகளும் ஒதுக்கப்பட வேண்டிய நிதிகளும் கூட, ஒதுக்கப்படுவதில்லை. இதனால், வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் திமுக கவுன்சிலர்கள் தினறி வருகின்றனர். இதுகுறித்து, பேரூர் செயலாளர், மாவட்ட செயலாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கை அசைவிற்கு ஆதரவாக அவர்கள் செயல்படுவதால், மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாத நிலையே இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டு வரும் திமுக தலைமை குறிப்பாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பரவை பேரூராட்சியில் கவனம் செலுத்தினால் மட்டுமே, மதுரை பாராளுமன்ற தொகுதியை எளிதில் வென்றெடுக்க முடியும். கடந்த பேரூராட்சி தேர்தல் வாக்குப்பதிவை கணக்கில் எடுத்துக் கொண்டாலே, இதற்கான வித்தியாசம் மிகத் தெளிவாக தெரியும் பரவை பேரூராட்சியை பொருத்தமட்டில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் கடந்த பேரூராட்சி தேர்தலில் முதல் வார்டில் திமுக அதிமுக வேட்பாளருக்கு ஏழு சதவீத வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. அதேபோல், இரண்டாவது வார்டில் ஒன்பது சதவிகிதமும் இருந்தது இதனாலையே தலைவர் பதவியை இழக்க நேர்ந்தது. தற்போது, திமுக தலைமை சுதாரிக்காவிட்டால், மதுரை பாராளுமன்ற தொகுதியில் வாக்குகள் நிறைந்த தகுதியான மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சியில் திமுகவின் வாக்கு வங்கி குறைவதோடு ஆளுங்கட்சிக்கு அவப்பெயரே மிஞ்சி நிற்கும். இதனை யாரிடம் சொல்வது என, தெரியாத சூழ்நிலையில் கட்சியின் மாவட்ட செயலாளர், ஒன்றிய, பேரூர் செயலாளர் ஆகியோரது ஆதரவும் கூட எங்களுக்கு இல்லாத நிலையில் திமுக தலைமைக்கு, செய்தியாளர்கள் மூலமாக இதனை தெரியப்படுத்திக் கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கு எந்த திட்டங்களையும் செய்ய முடியவில்லை. மீறி ,நியாயம் கேட்டால் பொய் வழக்கு போட்டுவிடுவோம் என்று மிரட்டுகின்றனராம்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

syed abdulla

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!