மதுரையில் ஆன்லைனில் மோசடி; வாங்காத லோனிற்கு பணத்தை கட்டக்கூறி இளம் பெண்ணை மிரட்டிய கும்பல்..

மதுரையில் ஆன்லைன் லோன் எனும் பெயரில் வாங்காத லோனிற்கு பணத்தை கட்டகூறி, வாட்ஸ்அப்பில் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக படம் அனுப்பி இளம்பெண்ணை மிரட்டிய கும்பல் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 42வயது நிரம்பிய  பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் Kredit bee app என்ற ஆன்லைன் கடன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் வாங்கியுள்ளார். அதனை மாதாந்திர அடிப்படையில் முழுவதுமாக லோனை கட்டி முடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி இளம்பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தெரியாத எண் ஒன்றில் இருந்து லோன் வேண்டுமா என்ற பெயரில் லிங்க் வந்துள்ளது. அந்த link-ஐ தொட்டவுடன் மீண்டும் அதனை டெலிட் செய்துள்ளார். இதனையடுத்து சில நிமிடங்களில் ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணின் வாட்ஸ் அப்பிற்கு BALSAM Credit ல் இருந்து 3ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது. இதனையடுத்து வங்கி மேலாளரிடம் சென்று கேட்டபோது 3 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஏற்கனவே லிங்க் வந்த நம்பரிலிருந்து வாட்ஸ் ஆப்பில் உங்கள் வங்கி கணக்கிற்கு ரூ.3 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்கள் கடனை உடனே திருப்பி செலுத்த வேண்டும் என மெசேஜில் கூறியுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண் எனக்கு லோன் வரவே இல்லை நான் ஏன் தர வேண்டும் என பதில் கூறியதற்கு 3ஆயிரம் ரூபாய் பணத்தை உடனே அனுப்பாவிட்டால் உங்களது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச படமாக மாற்றி அதனை உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கு சமூக வலைத்தளங்களிலும் அனுப்பிவிடுவோம் என மிரட்டியுள்ளனர். தொடர்ச்சியாக அந்த பெண்ணின் உறவினர் ஒருவருக்கு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பியதோடு, இது போன்று உனது உறவினருக்கு அனுப்பியுள்ளோம் என இளம்பெண்ணிண் முகத்தை ஆபாசமாக மார்பிங் செய்த புகைப்படத்தை அனுப்பியுள்ளனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் செய்வதறியாது பதற்றத்தில் இருந்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதனையடுத்து தனது உறவினரின் உதவியுடன் சைபர் கிரைம் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் மன உளைச்சலை போக்குவதற்கான மன நல ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து இதுபோன்ற தெரியாத மெசேஜ் வந்தால் லிங்குகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் எனவும் அறிவுறுத்தினர். இதனையடுத்து தற்காலிகமாக தேவையற்ற அழைப்புகளில் பேச வேண்டாம் எனவும், வாட்ஸ் அப் அதே நம்பரை பயன்படுத்த வேண்டாம் எனவும் ஆலோசனை வழங்கினர். மேலும் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு நாள்தோறும் இதுபோன்று மொபைல் லோன் ஆஃப் மூலமாக 2ஆயிரம், 3 ஆயிரம் என குறைந்த தொகையை கடன் வாங்கிவிட்டு இது போன்று மோசடி கும்பல்களில் சிக்கி தவிக்கும் புகார்கள் வந்து கொண்டே இருப்பதாகவும், எனவே இது போன்ற கடன் செயலிகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் அங்கீகாரம் பெற்ற வங்கிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!