சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் ஆபத்தான நிலையில் பள்ளியின் சுற்று சுவர் உள்ளது. விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முள்ளிபள்ளம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்று சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ள நிலையில், பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் ஒருவித அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் பாதுகாப்பற்ற நிலையில் பள்ளி வளாகம் உள்ள நிலையில் மாலை நேரங்களில் மது பிரியர்கள் சமூக விரோதிகள் பள்ளிக்குள் சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இங்கு பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில், பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் பாதுகாப்பாற்ற நிலையில் பள்ளி வளாகம் உள்ளது. இதனால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஒருவித அச்சம் ஏற்படுகிறது. ஆகையால் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளியில் நேரில் ஆய்வு செய்து உடனடியாக பழுதடைந்த சுற்று சுவரை சரி செய்து விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர்-வி.காளமேகம்
You must be logged in to post a comment.