மதுரை அவனியாபுரத்தில் 1,000 ஆண்டு பழமையான முருகன் சிலை கண்டெடுப்பு; பிற்கால பாண்டியர்கள் காலத்திய 11 ஆம் நூற்றாண்டு கால சிலையாக இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு
மதுரை காமராசர் பல்கலைக்கழக முதுகலை மாணவர் த.வினோத் அவனியாபுரம் பகுதியில் கள ஆய்வு செய்த போது, இந்த முருகன் சிலையை கண்டுபிடித்துள்ளார். குறிஞ்சி நிலத் தலைவனான முருகனுக்கு தமிழகத்தில் பல கோயில்கள் உள்ளன. பல தனிச் சிலைகளும் உள்ளன. மதுரை அவனியாபுரம் புறவழிச் சாலையின் மேற்குப் புறமாக அமைந்துள்ள செம்பண் ஊரணியின் அருகாமையில் இந்த முருகன் சிலை, தலை இல்லாமலும் முன்கைகள் மிகவும் சிதைந்த நிலையிலும் ஒரு மரத்தின் வேருக்கு அருகில் கிடைத்துள்ளது. இதன் உயரம் 60செ.மீ ஆகவும், அகலம் 50 செ.மீ ஆகவும் உள்ளது. கண்டிகை, சரப்பளி, ஆரம் ஆகிய அணிகலன்களுடன் தோள் மற்றும் கால் அணிகள் அணிந்த நிலையில் மேடையில் இடது காலை மடித்து வலது காலைத் தொங்க விட்டபடி சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது. வலது இடது கைகள் சிதைந்துள்ளன. பீடத்தின் கீழ்ப் பகுதியில் நீண்ட தோகையுடன் ஆண் மயில் சிற்பம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இது குறித்து ஆராய்ச்சி மாணவர் வினோத் கூறுகையில், பிற்கால பாண்டியர்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட முருகன் சிலை. காலம் 11 ஆம் நூற்றாண்டு அல்லது 12 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சிலையாக இருக்கலாம். தலை சிதிலடைந்து காணப்படும் சிலை இப்பகுதியில் ஏற்கனவே பிரதான சிவன் கோவில்கள் இருக்கலாம் அதில் சிதிலமடைந்த சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றது. கோவிலின் அருகிலேயே பழமை வாய்ந்த செவந்திஸ்வரர் கோவில் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுவதால் அங்கிருந்து கூட இந்த சிலைகள் வந்திருக்கலாம் என தெரிகிறது. முருகன் சிலை என்பதற்கான ஆய்வுகளை முன்னாள் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் வசந்தி, பழநி, தொல்லியல் ஆராய்ச்சியாளர் சாந்தலிங்கம் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளதாக தொல்லியல் துறை ஆய்வு மாணவர் மதுரை வினோத் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









