மூன்று லட்சம் வயிறுகளின் பசியாற்றிய ‘மதுரையின் அட்சய பாத்திரம்’ நெல்லை பாலு..
இது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மதுரையின் பரபரப்பான பகுதி. அங்கு கார் ஒன்று வருகிறது. அதன் வருகையை வழி மேல் விழி வைத்து காத்திருந்தது போல செல்கிறார்கள் சிலர். அதிலிருந்து இறங்கும் ஒரு நபர் காரில் அடுக்கி வைத்திருக்கும் உணவு டப்பாக்களை கொடுக்கிறார். வாஞ்சையோடும் கண்களில் நன்றியோடும் பசி தீர்ந்த மகிழ்வோடும் வாங்கி செல்கிறார்கள் அந்த மக்கள். உணவைக் கொடுத்த அந்த நபர் மதுரையைச் சேர்ந்த சமூக சேவகர் நெல்லை பாலு. கிட்டத்தட்ட 1,000 ஆவது நாட்களை நெருங்கி மதுரையில் சாலையோரம் இருக்கக்கூடிய முதியோர்களுக்கும், வறியோர், ஆதரவற்றோருக்கு உணவுகளை தினமும் கொடுத்து வருகிறார். இதற்காகவே ‘மதுரையின் அட்சயப் பாத்திரம்’ என்ற டிரஸ்ட் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இந்த சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
மதுரை எஸ்.எஸ். காலனி பொன்மேனி நாராயணன் சாலையில் இவர் அனுஷத்தின் அனுக்கிரகம் என்ற பெயரில் காஞ்சிப் பெரியவர் கோயிலை நிர்வாகித்து வருகிறார். அங்குள்ள சமையல் கூடத்திலேயே இதற்காக தினமும் காலையில் பிரத்தியேகமாக புளியோதரை, லெமன் சாதம், தக்காளி சாதம், வெஜ் பிரியாணி, தயிர் சாதம் என ஒவ்வொரு நாளும் விதவிதமாக சமையல் செய்து மதுரையில் ஆதரவற்றோருக்கு வழங்கி வருகிறார். இவரது இந்த பணியினைப் பாராட்டி மதுரை மாவட்ட நிர்வாகம் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளும் விருதுகள் வழங்கியும் கௌரவித்து உள்ளனர்.




கொரோனா காலகட்டத்தில் இருந்து இந்த சேவையை செய்து வரும் இவர் கடந்த பல ஆண்டுகளாகவே, பார்வைத்திறன் குறைபாடு உள்ள 250 மாற்றுத்திறனாளிக் குடும்பங்களுக்கும மாதம்தோறும் அரிசியும், ஆண்டுக்கு ஒரு முறை புத்தாடைகளும் வழங்கி வருகிறார். ‘வெறுங்கை முழம் போட முடியாது!’ என்பர். தொடக்கத்தில் தனது சொந்த பணத்தை போட்டு உதவி வந்தவர் இப்போது, நண்பர்கள் தெரிந்தவர்கள் என பலரிடமும் உதவிகளைப் பெற்று சேவை செய்து வருகிறார்.
மதுரை ஜல்லிக்கட்டு என்ற ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவராகவும் இவர் பல சேவைகளை செய்து வருகிறார் தவிர, பாரதி யுவகேந்திரா என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுகளையும் வழங்கி ஊக்குவிப்பு பணிகளையும் செய்து வருகிறார். இவ்வாறு ஆன்மிகம், கல்வி, சமூகப் பணி என பல தலங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறார். 9442630815 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அவருடன் இணைந்து கொள்ளலாம்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









