பூம்புகார் காவிரி ஆற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க ரூ 7 கோடியே 86 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் புதிய தடுப்பணை கட்டுவதற்காக துணிநூல்துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்க பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்கிறது. காவிரி ஆற்றில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுந்து வருவதால் விவசாயம் பெரு மளவு பாதிக்கப்படுகிறது. கடல்நீர் ஆற்றில் உட்புகுவதை தடுக்க ஆண்டு தோறும் விவசாயிகள் காவிரிபுகும்பட்டினம் பகுதியில் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக தடுப்பு ஏற்படுத்திவந்ததுடன், கடல்நீர் உட்புகுவதை நிரந்தரமாக தடுக்க தடுப்பணை அமைக்க கோரிக்கை விடுத்துவந்தனர்.இந்த நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ரூ.7 கோடியே 86 லட்சத்து 57 ஆயிரம் ஒதுக்கீடு செய்தது. பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்படும் தடுப்பணை அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் பி.நாயர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் கலந்துகொண்டு தடுப்பணை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கிவைத்தார். இதில் பூம்புகார் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் எஸ்.பவுல்ராஜ் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரிகள் லலிதா ஐஏஎஸ், ஸ்ரீநாதா ஐபிஎஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, ஆர்.டி.ஒ.மகாராணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது;கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு காவிரிநீர் விவசாய பணிக்காக முன்னதாகவே திறக்கப்பட்டதால் பெருமளவு விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கடல்நீர் உட்புகாமல் தடுக்க பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.மேலும் விவசாயிகளின் விளை நிலங்களில் விலையும் பொருட்கள் அனைத்தும் அரசாங்க கட்டிடத்தில் அடுக்கி வைப்பதற்கான இடப் பற்றாக் குறையை பூர்த்தி செய்யும் விதமாக விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப கட்டிட வசதிகள் ஏற்படுத்தி நெல், பருத்தி மற்றும் உளுந்து, பயிர் வகையான விளைபொருட்களை விற்பனை செய்ய புதிதாக கட்டிடங்கள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.


You must be logged in to post a comment.