காவிரி குழுமத்தின் தலைவரும், மயிலாடுதுறை மாவட்டத்திற்காக தொடர்ந்து போராடி வந்த மாயூர யுத்தம் இயக்கத்தின் தலைவருமான கோமல் அன்பரசன் மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பதற்கான சிறப்பு அதிகாரி லலிதா ஐ.ஏ.எஸ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.அப்போது மயிலாடுதுறை மாவட்டத்தின் பெருமைகள் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் ஆகியவை பற்றி தாம் எழுதிய மாயூர யுத்தம் புத்தகத்தை சிறப்பு அதிகாரியிடம் வழங்கினார். மேலும் மாவட்ட எல்லை வரையறை குறித்தும் தமது கருத்துகளை கோமல் அன்பரசன் அவர்கள் சிறப்பு அதிகாரியிடம் விளக்கினார். தொடர்ந்து,www.mayiladuthuraidistrict.com என்ற இணையதளம் அதற்காக உருவாக்கப்பட்டிருப்பதையும் சிறப்பு அதிகாரியிடம் தெரிவித்தார். அதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர் அந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள் அரசு சார்பில் உருவாக்கப்படும் மாவட்டத்திற்கான இணையதளத்திற்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் குறித்து பல்வேறு ஆய்வுகளையும் தகவல்களையும் கோமல் அன்பரசன் அவர்கள் சேகரித்து வைத்திருப்பது குறித்து சிறப்பு அதிகாரி மகிழ்ச்சி தெரிவித்தார். மாவட்ட எல்லை வரையறை குறித்து ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால் கோமல் அன்பரசனிடம் கேட்டு பெற்றுக் கொள்வதாகவும் சிறப்பு அதிகாரி கூறினார்.மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் புவியியல் ரீதியாக நாகப்பட்டினத்திலிருந்து இரண்டாக பிரிந்து இருப்பதால் மாவட்ட எல்லை வரையறையில் எந்த சிக்கலும் இல்லை என்று கோமல் அன்பரசன் கூறியதை சிறப்பு அதிகாரி ஆமோதித்தார். மேலும் கிராமங்களை வருவாய் உட்கோட்டங்களுடன் இணைக்கும்போது அந்தந்த கிராம மக்களின் கருத்துகளுக்கு முழு முன்னுரிமை கொடுத்து எல்லைகளை உருவாக்க வேண்டும் என்ற கோமல் அன்பரசனின் கோரிக்கையை சிறப்பு அதிகாரி ஏற்றுக் கொண்டு அப்படியே செய்வதாகவும் உறுதி அளித்தார்.
சிறப்பு அதிகாரி லலிதா ஐ.ஏ.எஸ் அவர்கள் ஐ.ஏ.எஸ் ஆவதற்கு உந்து சக்தியாக இருந்த திருச்சி மாவட்டம் திருவளர்ச்சிபட்டி கிராமத்தின் வளர்ச்சியை போல மயிலாடுதுறையும் மற்றவர்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளதக்க அளவில் வளர்ச்சி அடைய வேண்டுமென கோமல் அன்பரசன் கேட்டுக்கொண்டார். அதனை புன்னகையோடு ஏற்றுக்கொண்ட சிறப்பு அதிகாரி மயிலாடுதுறை மாவட்டத்தை நிச்சயம் வளர்ச்சியடையச் செய்வோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.அப்போது காவிரி குழுமத்தின் நிர்வாகிகள், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் அகஸ்டின் விஜய், காவிரி குழுமத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சிவச்சந்திரன், ஊடகவியலாளர் கவிஞர் கவிமோகன், செம்பொனார் கோயில் டெம்பிள் சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் குணசீலன், காவிரி ஆர்ட்ஸ் கார்த்திக் ஆண்டனி, காவிரி கதிர் செய்தியாளர் கவிகார்த்திகேயன், காவிரி குழும செய்தி தொடர்பாளர்கள் யோகேஷ்வரன், கோபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்





You must be logged in to post a comment.