அர்னேஷ் குமார் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்ற காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்

மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக ஜெயராஜ் மற்றும் ஃபீனிக்ஸ் ஆகியோர் இறந்துவிட்டார்கள். அவர்களுடைய இறப்புக்கு காரணம் தூத்துக்குடி காவல்துறையின் மனித உரிமை மீறல் ஆகும். அதற்கு துணை போனது சம்மந்தப்பட்ட நீதித்துறை குற்றவியல் நடுவர் அவர்களுமே காரணம்.தூத்துக்குடி காவல்துறையும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்களும் கடந்த 2014-ல் உச்சநீதிமன்றம் அர்நேஷ் குமார் எதிர் பீகார் மாநிலம் என்ற வழக்கில் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றியிருந்தால் தந்தை மகனுடைய மரணத்தை தவிர்த்திருக்கலாம்.

சாத்தான்குளம் தந்தை-மகன் நீதிமன்ற காவலில் மரணமடைந்த விவகாரத்தில் இருவரையும் கைது செய்த சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்களையும் அவர்களை சிறைக்கு அனுப்பிய குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்களின் எந்திரத்தனமான நடவடிக்கையுமே காரணமாகும். உச்சநீதிமன்றம் 2014இல் அர்நேஷ் குமார் எதிர் பீகார் மாநிலம் என்ற வழக்கில் நீதியரசர்கள் சந்திரமௌலி பிரசாத் மற்றும் பினாகி சந்திர போஸ் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், காவல்துறைக்கும் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும் சில வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்கினார்கள்.

குறிப்பாக ஏழு ஆண்டுகளோ அல்லது ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை உள்ள குற்றங்களில் தேவையில்லாமல் கைது நடவடிக்கை செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்கள்.அதுபோல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதற்காக குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்த படும்போது தேவை இல்லாமல் எந்திரத்தனமாக அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட கூடாது என அந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேவையில்லாமல் ஒருவரை கைது செய்தால் அதற்காக கைது செய்த காவல் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை யும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையால் ஆஜர்படுத்தும் போது அவரை நீதிமன்ற காவலுக்கு ஏன் உட்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கு உரிய விளக்கத்தினை குற்றவியல் நீதித்துறை நடுவர் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காமல் எந்திரத்தனமாக செயல்பட்டால் அவர்கள் மீது சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றம் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் ஏழு ஆண்டுகளோ அல்லது ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை உண்டான குற்றங்களை புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களை தேவையில்லாமல் கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கும் இயந்திரத்தனமாக அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பக் கூடாது என குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த இரு உத்தரவுகளையும் சாத்தான்குளம் காவல் நிலையமும், சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்களும் பின்பற்றி இருந்தால் இன்றைக்கு தந்தை மகன் என்ற இரு உயிர்கள் பிரிவதற்கு வாய்ப்பில்லை.

அவர்களுடைய மரணத்திற்கு காரணம் சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகளின் மனித உரிமை மீறலும் தேவையற்ற கைது நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்களின் இயந்திரத்தனமான நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய உத்தரவும் ஆகும். உச்ச நீதிமன்றம் அர்நேஷ் குமார் வழக்கில் பிறப்பித்த உத்தரவை மீறிய சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகள் மீதும் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மீதும் மாநில அரசும் உயர்நீதிமன்றமும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வரும் காலங்களில் காவல்துறையும் நீதித்துறையும் அர்நேஷ் குமார் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் அவ்வாறு பின்பற்றினால் எந்த பிரச்சனையும் எழுவதற்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற பிரச்சினைகள் எழும், தேவையில்லாத மரணங்கள் நிகழும் என்பதை முன்கூட்டியே கணித்து தான் உச்ச நீதிமன்றம் அதை தடுக்கும் பொருட்டு தான் அர்நேஷ் குமார் வழக்கில் வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்கியது . ஆனால் தீர்ப்பு வழங்கி ஆறு ஆண்டுகளாகியும் காவல்துறையும் நீதித்துறையும் அந்த தீர்ப்புக்கு தலை வணங்கியதாக தெரியவில்லை.

ஆகையினால் சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக காவல் துறையின் தலைவராக விளங்கக்கூடிய சட்டம் ஒழுங்கு டிஜிபி அவர்களும் உடனடியாக நீதித் துறைக்கும் காவல்துறைக்கும் அர்நேஷ் குமார் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட வேண்டும் தவறும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மரணமடைந்த தந்தை மகன் குடும்பத்தாருக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!