மயிலாடுதுறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நேற்று அனைத்து வர்த்தக சங்கங்கள் கூட்டம் மயிலாடுதுறை எம் எல் ஏ வீ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.இதில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசேகரன், நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மயிலாடுதுறை பகுதியில் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்வதை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனை ஏற்று 21 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முழு கடையடைப்பு நடத்துவது என்று வர்த்தக சங்கத்தினர் முடிவெடுத்தனர். ஆனால் அரசு தரப்பில் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் முடிவு எட்டப்படாமல் கூட்டம் முடிந்தது.
இந்த நிலையில் மாயூரம் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் செந்தில் வேல் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 21ம் தேதி மற்றும் வருகிற 28-ஆம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மயிலாடுதுறை நகரின் அனைத்து பகுதிகளிலும் முழு கடையடைப்பு நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.அதேபோல 22-ம் தேதி திங்கட்கிழமை முதல் 30-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து வார நாட்கள் முழுவதும் இரவு 7 மணிக்கு அனைத்து கடைகளையும் மூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதனையடுத்து இன்று மயிலாடுதுறை நகரிலுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.


You must be logged in to post a comment.