தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் (எல்டிடிஇ) மீதான தடையை இந்திய உள்துறை அமைப்பு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ளது..
கடந்த 1991 மே 21ஆம் தேதி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியா தடை விதித்தது. அத்தடை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், கடந்த 2019ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீட்டித்திருந்த நிலையில், இப்போது மீண்டும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னும் இந்திய ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய அரசு கருதுகிறது.
“இலங்கை உள்நாட்டுப் போட்டில் அந்த அமைப்பு தோற்கடிக்கப்பட்டபோதும், தனி ஈழம் என்ற கொள்கையை அது இன்னும் கைவிடவில்லை. தனி ஈழம் அமைப்பதற்கான பிரசாரமும் நிதிதிரட்டு நடவடிக்கைகளும் தொடர்ந்து ரகசியமாக இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், உயிர்தப்பிய விடுதலைப் புலிகள் இயக்க நிர்வாகிகள் இலங்கையிலும் அனைத்துலக அளவிலும் அவ்வமைப்பை மீண்டும் கட்டமைப்பதற்குத் தேவையான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். அவ்வியக்கத்திற்கு ஆதரவானோர் மக்களிடம் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருகின்றனர்.
“இந்தியாவிலும், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இது இந்திய ஒருமைப்பாட்டிற்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்,” என்று இந்திய உள்துறை அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.