இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 14 ஆம் தேதி மீண்டும் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றைய தினம் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பின்னர் இதற்கு அடுத்த நாள் மார்ச் 15 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.இதனைத் தொடர்ந்து மீண்டும் பேரவை கூடியது. மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு வினா விடை நேரத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.பின்னர் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ், CPM, CPI, விசிக உள்ளிட்ட கட்சிகள் சபாநாயகருக்கு ஆதரவாக பேசினர். மேலும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ”சட்டப்பேரவை தலைவர் மீது அதிமுக கொண்டுவந்த தீர்மானத்தில் உண்மைக்கு புறம்பான கருத்துகள் இடம்பெற்றுள்ளது. கழக அரசின் மீது குற்றம் குறை கூற வாய்ப்பு இல்லாததால், இப்படி ஒரு தீர்மானமா? உட்கட்சி பூசலால் ஏற்பட்ட குழப்பத்தை மறைக்க, அதை திசை திருப்பவே இப்படி ஒரு தீர்மானமா ?” என கேள்வி எழுப்பினார்.மேலும், ”பேரவை தலைவர் அப்பாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததற்கு உங்கள் மனசாட்சி உறுத்தும், நீங்கள் ஏவிய அம்பை இந்த அவை ஏற்காது” கூறினார். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் அதிமுக படுதோல்வியடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்ட டிவிஷன் வாக்கெடுப்பிலும் அதிமுக படுதோல்வியடைந்தது. இவ்வாக்கெடுப்பு நடத்தும் போது பேரவைத் தலைவர் அப்பாவு அவையில் இல்லை.பின்னர் வாக்கெடுப்பு முடிந்தபின் பேரவை தலைவர் அப்பாவு தனது நாற்காளியில் அமர்ந்து மீண்டும் அவை வழி நடத்தினார்.

You must be logged in to post a comment.