எல்ஐசி உள்ளிட்ட இன்சூரன்ஸ் அலுவலகங்கள் சனி, ஞாயிறு செயல்பட உத்தரவு; வங்கி, வருமான வரித்துறையும் திறந்திருக்கும்.. எல்ஐசி மற்றும் இதர காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் மண்டல மற்றும் கிளை அலுவலகங்களை மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் திறந்து வைக்க வேண்டும் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இவற்றுக்கு அப்பால் தங்களுக்கான அலுவல் தேவைக்காக, வங்கி மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்களும் இந்த வார இறுதியில் திறந்திருக்கும்.
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம், அதன் மண்டலங்கள் மற்றும் கிளை அலுவலகங்களை மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் சாதாரண வேலை நேரத்தின்படி வழக்கமான செயல்பாடுகளுக்காக திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிவை முன்னிட்டு பாலிசிதாரர்களுக்கான தேவையின்பொருட்டு, மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களைத் திறந்து வைக்குமாறு இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Irdai) அறிவுறுத்தியுள்ளது.
பாலிசிதாரர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், இந்த இரு தினங்களில் வழக்கமான வேலை நேரத்தின்படி காப்பீட்டு நிறுவனங்களின் கிளைகள் திறந்திருக்கும். மார்ச் 30, 31 என நிதியாண்டின் நிறைவு தினங்கள், சனி – ஞாயிறு என விடுமுறையில் வருவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் அறியும் வகையில் போதுமான அறிவிப்பு மற்றும் விளம்பரம் வழங்குமாறும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி, அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்காக மார்ச் 31 ஞாயிறு அன்று, சாதாரண வேலைநேரப்படி வங்கி கிளைகள் பணி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது. “மார்ச் 31, 2024 ஞாயிற்றுக் கிழமை அன்று பரிவர்த்தனைகளுக்கு அரசாங்க ரசீதுகள் மற்றும் கொடுப்பனவுகளைக் கையாளும் வங்கிகளின் அனைத்து கிளைகளையும் திறக்குமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் அனைத்து வங்கிகளின் கிளைகளையும் திறந்து வைக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது” என்று ரிசர்வ் வங்கி முன்னதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இதனுடன் ரிசர்வ் வங்கி அலுவலகங்களும் மார்ச் 31 அன்று திறந்திருக்கும். ஆனால் வருடாந்திர கணக்குகளை மூடுவது தொடர்பான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக, ஏப்ரல் 1, திங்கள் கிழமை அன்று ரிசர்வ் வங்கிக் கிளைகளில் வழக்கமான 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் அல்லது டெபாசிட் செய்யும் வசதி செயல்படாது. அந்த சேவை ஏப்ரல் 2 முதல் வழக்கம்போல தொடங்கும். இதற்கான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வார இறுதியில் திறந்திருக்கும் வங்கிகள் மற்றும் காப்பீட்டு அலுவலகங்கள் வரிசையில், நிலுவையில் உள்ள துறை சார்ந்த பணிகளை முடிக்கும் நோக்கில் வருமான வரித் துறையும் வார இறுதியில் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









