இளம் பெண்ணுடன் லெஸ்பியன் உறவு: தனது கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாய்…

இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின உறவால் தனது கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாயை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்குத் தூண்டுதலாக இருந்த தன்பாலின காதலியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள கெலமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பெயிண்டர் தொழிலாளி. இவரின் மனைவி பாரதி (26).

இந்த தம்பதிக்கு 5 மற்றும் 4 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மீண்டும் கருத்தரித்த பாரதிக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு துருவன் என பெயர் சூட்டினர்.

இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி மதியம், மனைவி பாரதி பால் கொடுத்தபோது தனது குழந்தை துருவன் புரண்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துவிட்டதாகக் கூறி சுரேஷ், அப்பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் குழந்தையை தூக்கிச் சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினர். இதைக் கேட்டதும் சுரேஷ் கதறி அழுதார். ஆனால் தாய் பாரதி சோகமின்றி காணப்பட்டார். இதையடுத்து உடற்கூறாய்வுக்கு குழந்தையின் உடலை அனுப்பாமல் வீட்டுக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளையும் முடித்து உடலை நல்லடக்கம் செய்தனர்.

அப்போதும், குழந்தையை இழந்த துக்கத்தை காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக நடந்துகொண்ட பாரதியின் நடத்தை குறித்து உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், “கைக்குழந்தையை கொல்லும் அளவுக்கு ஒரு தாய்க்கு மனம் வருமா?” என்று எண்ணி உறவினர்கள் அமைதியாக இருந்தனர்.

இந்த நிலையில், மனைவி பாரதி பயன்படுத்தி வந்த 2 செல்போன்களில் ஒன்றை எடுத்து சுரேஷ் பார்த்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் மகள் சுமித்ரா (20) வாட்ஸ்‌அப் மூலம் அனுப்பிய வாய்ஸ் மெசேஜை கேட்டிருக்கிறார்

அதில், “குழந்தையின் வாயை பொத்தி கொன்றுவிடு” என சுமித்ராவின் குரல் பதிவும், “நீ சொன்ன மாதிரியே குழந்தையை கொன்னுட்டேன். புரண்டு செத்துப் போச்சி. வெளியே போய் இருக்கிற என் வீட்டுக்காரன் வரதுக்குள்ள, தூங்க வைக்கிற மாதிரி படுக்க வச்சிடுறேன். அவன் வந்ததும், சந்தேகம் வராததுபோல குழந்தைக்கு உடம்பு சரியில்லனு சொல்லிடுறேன்” எனக் கூறுவதைப்போன்ற பாரதியின் பதில் குரல் பதிவும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதைக் கேட்டு அதிர்ந்த கணவன் சுரேஷ் உடனடியாக கெலமங்கலம் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். அந்த போனில், தனது மனைவி பாரதி மற்றும் இளம்பெண் சுமித்ராவுடன் தன்பாலின உறவில் ஈடுபட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் இருந்ததையும் கண்டுபிடித்த சுரேஷ், அந்த போனை போலீஸாரிடம் ஒப்படைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, வழக்குப் பதிவு செய்த போலீஸார், குழந்தையின் தாய் பாரதி மற்றும் அவருடன் தன்பாலின உறவில் இருந்த இளம்பெண் சுமித்ராவையும் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், 2 ஆண்டுகளுக்கும் மேலாக, பாரதி சுமித்ராவுடன் தன்பாலின உறவில் ஈடுபட்டு வந்திருக்கிறார். தன்பாலின ஈர்ப்பு காதலி சுமித்ராவின் பெயரையும் `Sumi’ என ஆங்கிலத்தில் தனது மார்பில் `டாட்டூ’ குத்தியிருக்கிறார் பாரதி.

இது குறித்து, ஏற்கெனவே கணவன் சுரேஷுக்குத் தெரியவந்தபோதே, மனைவி பாரதியிடம் `இது தவறு’ என அறிவுரைக்கூறிக் கண்டித்திருக்கிறார். அதன் பிறகும், பாரதி தன்பாலின உறவைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், சுரேஷ் வேலைக்குச் சென்றுவிட்ட பிறகு சுமித்ரா அடிக்கடி வீட்டுக்கு வந்துசெல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, இருவரும் தகாத செயல்களில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த நேரத்தில், குழந்தை பசிக்கு அழுவது இருவருக்குமே எரிச்சலை ஏற்படுத்தி, குழந்தை மீது கொடிய எண்ணம் உருவாகியிருக்கிறது

தன்பாலின காதலுக்கு இடையூறாக இருக்கும் குழந்தையை கொன்றால் மட்டுமே நமக்கு நிம்மதி’ என்று சுமித்ரா சொல்ல, குழந்தையை பெற்றெடுத்த பாரதியும் அதற்கு சம்மதித்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, சம்பவத்தன்று சுரேஷ் வேலைக்குச் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்புவதற்குள்ளாக குழந்தையின் உயிரை பறித்திருக்கின்றனர்.

இதையடுத்து, புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூரச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!