வெடிக்கும் போர்? இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்! பதற்றத்தில் மத்திய கிழக்கு! பல்வேறு இந்திய விமானங்கள் ரத்து..
ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் கொத்து கொத்தாக இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர் உள்ளனர். இதனால் இஸ்ரேல் – லெபனான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியதே இதற்கு காரணம். நீண்டகாலமாக இருதரப்புக்கும் இடையே மோதல் இருந்து வந்தாலும் கூட கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தாக்குதல் தான் போரை உருவாக்கியது.
இந்த போர் 10வது மாதமாக நடந்து வருகிறது. தற்போது இஸ்ரேல் படைகள் காசா நகருக்குள் நுழைந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் சுமார் 40,000 பாலஸ்தீன மக்கள் பலியாகி உள்ளனர். ஹமாஸ் மீதான போரை ஈரான் தொடக்கம் முதலே கண்டித்து வருகிறது. போரை கைவிடாவிட்டால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்து. ஆனால் இஸ்ரேல் அதனை கண்டுக்கொள்ளாமல் போரை தொடர்ந்து வருகிறது.
இதனால் ஈரான் இன்னொரு திட்டத்தை கையில் எடுத்தது. அதாவது இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மூலம் தாக்குதலை தொடங்கியது. ஈரான் அறிவுரையின்படி ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி அவ்வப்போது தாக்கி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 முக்கிய தலைவர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர்.
அதாவது லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி புவாத் ஹுக்ரை என்பவர் கொல்லப்பட்டார். அதன்பிறகு ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைகர் டெஹ்ரானில் வைத்து கொல்லப்பட்டார். இந்த கொலையை செய்தது இஸ்ரேலின் உளவு அமைப்பு என கூறப்படுகிறது. இது ஈரானை கொந்தளிக்க செய்தது. அதுவும் ஈரானுக்குள் நுழைந்தே ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொன்றதை ஈரானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இஸ்ரேலை சும்மா விடமாட்டோம். நிச்சயம் பழிதீர்ப்போம் என ஈரான் அறிவித்தது.
இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு பெற்ற ஏராளமான அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பி தாக்குதல் நடத்தலாம் என்பதால் தான் இந்த பதற்றம் என்பது அதிகரித்தது. இத்தகைய சூழலில் தான் நேற்று நள்ளிரவில் லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் திடீரென்று இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடங்கினர்.
சுமார் 25 நிமிடங்கள் வரை இடைவிடாமல் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை நோக்கி Katyusha வகை ராக்கெட்டுகளை ஏவினர். இந்த தாக்குதல் என்பது வடக்கு இஸ்ரேல் பகுதியான பெய்ட் ஹில்லெல்லை டார்க்கெட்டாக கொண்டிருந்தது. இதனை முன்கூட்டியே அறிந்த இஸ்ரேல் படையினர் வான்வெளி தாக்குதலை தடுக்கும் டோம் அமைப்பை பயன்படுத்தி இந்த தாக்குதலை தடுத்தனர். இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
அதேவேளையில் இஸ்ரேலும் திரும்பி பதில் தாக்குதல் நடத்தியது. அதன்படி லெபனான் நாட்டின் கேஃபர் கிளா மற்றும் டெய்ர் சிரியனி உள்ளிட்ட இடங்களை டார்க்கெட் செய்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. மேலும் ஈரான் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு பக்கப்பலமாக உள்ளதால் அங்கு போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் பல நாடுகளும் லெபனானில் உள்ள தங்களின் தேசத்து மக்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பி உள்ளனர்.
அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் லெபனானில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை செய்துள்ளது. அதேபோல் இந்தியாவும் எச்சரிக்கை செய்துள்ளது. அதன்படி இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவசியமற்ற நோக்கத்திற்காக யாரும் லெபனான் நாட்டிற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ்வுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் வரும் 8ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.