உத்தரவு பிறப்பித்த அதே நாளிலேயே பள்ளிகளில் ‘ப’ வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

பள்ளிகளில் மாணவர் இருக்கை வரிசையை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் சமீபத்தில் வெளியான, ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற திரைப்படம், கடைசி வரிசை இருக்கையில் அமர்வதால், கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது என்பதை காட்சிப்படுத்தி இருந்தது. அரை வட்ட வடிவில் மாணவர்களின் இருக்கை மாற்றி அமைக்கப்பட்டால், கடைசி பெஞ்ச் என்பதே இருக்காது என்றும் அந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இந்தப் படத்தின் எதிரொளியாக, அம்மாநிலத்தில், ஒரு சில பள்ளிகளில் ‘ப’ வடிவில் மாணவர்களின் இருக்கைகள் மாற்றம் செய்யப்பட்டன. பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் ஒரு சில பள்ளிகளில் இத்தகைய மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. தமிழகத்தில் வாய்ப்பு உள்ள பள்ளிகளில், ‘ப’ வடிவில் இருக்கை வரிசையை மாற்றி அமைக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் இந்த உத்தரவு, சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஒரு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இன்னொரு தரப்பினர் இந்த முடிவை குறை கூறினர். மாணவர்கள் நீண்ட நேரம் பக்கவாட்டில் பார்வையை செலுத்த வேண்டி இருக்கும். இதனால் கழுத்து வலி ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து, உத்தரவு பிறப்பித்த அதே நாளிலேயே ‘ப’ வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வல்லுனர்களிடம் உரிய ஆலோசனை பெறும் வரை திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இது தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!