அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நெல்லை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு FAIRA நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.முத்துராம் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். உறுப்பினர் சீவநல்லூர் சாமித்துரை அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில், மலைப்பகுதியில் அமைந்துள்ள (HACA) இடங்களை 10 சென்ட்டுக்கும் மேல் பதிவுத்துறையின் வழிகாட்டுதலின் படி சொத்து பரிமாற்று சட்டம், பதிவுச் சட்டம் பிரிவு 35 மற்றும் 22ஏ பிரிவிற்கு உட்பட்டு நிலமாகவோ, அல்லது பண்ணை நிலமாகவோ அதன் பயன்பாட்டை குறிப்பிட்டு பதிவு செய்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். மலைப்பகுதி எல்லையிலிருந்து 500 மீட்டருக்கு வெளியில் உள்ள நிலங்களை கிராமம் அடிப்படையில் இல்லாமல் புல எண்கள் வாரியாக வகைப்படுத்தி, HACA தடையின்மை சான்று பெறுவதற்கு ஏதுவாகவும், வீட்டுமனைப் பிரிவாக ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அரசு வழிவகை செய்திட வேண்டும்.
நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அங்கீகாரம் இல்லாமல் மனைகளாகவும், ஐந்து சென்ட் மற்றும் பத்து சென்ட் நிலமாகவும், மனையாகவும் கடந்த ஆண்டு வரை பதிவு செய்த ஆவணங்களை மறுகிரையம் செய்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். கிராமநத்தம் வகைபாடு உள்ள மனைகளை குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பொதுப்பாதை அமைத்து பாகப்பிரிவினை ஆவணம், செட்டில் மெண்ட் ஆவணம், ஏற்பாடு ஆவணம், விடுதலை ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களை எந்தவித நிபந்தனைகள் மற்றும் தங்கு தடைகள் ஏதுமின்றி பதிவு செய்திட அரசு வழிவகை செய்ய வேண்டும். அங்கீகாரமற்ற வீட்டு மனைப் பிரிவுகளில் அமையப் பெற்றுள்ள பொதுப்பாதைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு தான ஆவணமாக பதிவு செய்து கொடுப்பதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்.
வழிகாட்டி மதிப்பில் உள்ள குளறுபடிகளை (அரசு அதிகாரிகள் – உள்ளாட்சி பிரதிநிதிகள் – மற்றும் ரியல் எஸ்டேட் சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய) முத்தரப்புக்கு குழு அமைத்து சரி செய்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 25 சென்ட் பரப்பளவிற்கு மேல் உள்ள வேளாண் பயன்பாட்டு நிலங்களை மனை மதிப்பாக இருக்கும் பட்சத்தில், அதன் உண்மைத் தன்மை மற்றும் பயன்பாட்டினை கண்டறிந்து ஆவணம் பதிவு செய்யும் வகையில் குறைவு முத்திரைத் தீர்வை பிரிவு 47/A1 இன் கீழ், நான்கு பக்க எல்லையில் அமைந்துள்ள சொத்தின் உச்சபட்ச நில மதிப்பின் அடிப்படையில் நிலமாகவே பதிவு செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் தொழிலின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் பொது அதிகார ஆவண கட்டணத்தை குறைந்தபட்சம் ஒரு சதவீதம் எனவும் அதிகபட்சமாக ரூபாய் 25000 எனவும் நிர்ணயித்தும், மேலும் கட்டுமான ஒப்பந்த கட்டணத்தை ஒரு சதவீதம் முத்திரைத் தீர்வை எனவும் மற்றும் ஒரு சதவீதம் பதிவு கட்டணம் எனவும் அரசு நிர்ணயித்து உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும். ஆவண பதிவுகள் விரைந்து முடிக்க, கணினி இணைய வேகம் மற்றும் மென்பொருள் பயன்பாட்டு வேகத்தை அதிகரித்து, ஆன்லைன் 2.0 இல் உள்ள குளறுபடிகள் மற்றும் இடர்பாடுகளை களைந்திட அரசு வழிவகை செய்ய வேண்டும்.
அங்கீகாரமற்ற மனைகளை அங்கீகாரம் பெறுவதற்கு ஒரு வாய்ப்பினை அளிக்கும் வகையில், மனை வரன்முறை சட்டத்தை மேலும் கால நீட்டிப்பு செய்வதாக அமைச்சர் அறிவித்தும், இதுவரை நீடிக்கப்படவில்லை. உடனடியாக கால நீட்டிப்பு செய்திட அரசு வழிவகை செய்ய வேண்டும். மனைப்பிரிவு அங்கீகாரம் பெறும் இனங்களில் அணுகு சாலையின் அளவினை ஏற்கனவே அமையப் பெற்றுள்ள வீட்டுமனை பிரிவில் அமைந்துள்ள சாலையின் அடிப்படையில் (மனை வரன்முறை சட்டம் 2017 இல் குறிப்பிட்டுள்ள விதிகளின்படி) புதிய வீட்டுமனை பிரிவுகள் அனுமதி பெறும் வகையில் அரசு வழிவகை செய்ய வேண்டும். அங்கீகாரம் பெற்ற மனைகளில் கட்டிட திட்ட அனுமதி வழங்கும் அதிகார பகிர்வின் படி ஊரக உள்ளாட்சியில் கட்டிட திட்ட அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள, பல ஆயிரம் விண்ணப்பங்களின் மீது இதுவரை இறுதி முடிவு ஏதும் இன்றி மாநிலம் முழுவதும் கட்டிட திட்ட அனுமதி வழங்காமல் கிடப்பில் இருக்கிறது. இதனை அரசு கவனத்தில் கொண்டு, இணைய கட்டமைப்பு இறுதி பெறும் வரை, பழைய நடைமுறையின் அடிப்படையில் விரைவில் கட்டிட திட்ட அனுமதி வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மனைப்பிரிவு மற்றும் கட்டிடத் திட்ட அனுமதி இறுதி ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை உள்ளாட்சி பிரதிநிதிகள் இடமிருந்து மாற்றி அமைத்து ஒற்றை சாளர முறையில் இணையதளம் வாயிலாகவே விண்ணப்பம் செய்வது மட்டுமல்லாது, இறுதி அங்கீகாரமும் இணையதளம் வாயிலாகவே பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறைச் சார்ந்தவர்கள் 250 பேர் கலந்து கொண்டனர். மேலும், இக் கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக தொழில் அதிபர்கள் சுந்தர மகாலிங்கம், ரஜப்முகமது, பாலகிருஷ்ணன், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் செந்தில்குமார், துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார், செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், மாநிலச் செயலாளர் மோகன், மாநில இணைச்செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் சக்திவேல், தலைமை நிலையச் செயலாளர் கார்த்திக் செயற்குழு உறுப்பினர் பிரியாகாந்தன், கோவை மாவட்ட தலைவர் கணேஷ்குமார், நெல்லை மாவட்ட பொறுப்பாளர் பரஞ்சோதிபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் காளிராஜ் என்கிற களேப், திருச்செந்தூர் தாலுக்கா பொறுப்பாளர் காயல்பட்டணம் சித்திக், உறுப்பினர்கள் சன் ப்ரோமோட்டர்ஸ் சீனிவாசன், சத்யா எலைட் ப்ராப்பர்ட்டீஸ் கலைச்செல்வன், தட்சிணாமூர்த்தி, ஹரிபாபு, சுரேஷ், மனோகரன், சார்லஸ், சாகுல் ஹமீது, நஜீம், சித்திக், சிவகுமார், சிவகுமரன், ரமேஷ், ரவீந்திரன், முபாரக் ஆகியோருடன் 250 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











