கொலை வழக்கில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

கும்பகோணத்தில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன்(29). இவர் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் லோடுமேனாக இருந்து வந்தார். மேலும் அங்கு கேன்டீன் ஒன்றையும் நடத்தி வந்தார். இதனால் இவரை அப்பகுதியினர் கேன்டீன் செந்தில் என்றே அழைத்து வந்தனர். இந்நிலையில், தாராசுரம், அனுமார்கோவில் தெருவைச் சேர்ந்த லெட்சுமணனுக்கும், செந்தில்நாதனுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் காரணமாக தகராறு ஏற்பட்டு முன்விரேதமாக மாறியது இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி, லெட்சுமணன், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களான தாராசுரம் பகுதியைச் சேர்ந்த ராமர், திருநாவுக்கரசு, விக்னேஷ், இளங்கோவன், மூர்த்தி, மதுரை செல்லுரை சேர்ந்த பாண்டி, கார்த்திக், கொரநாட்டுகருப்பூரை சேர்ந்த கார்த்திக் ஆகிய ஒன்பது பேரும் சேர்ந்து தாராசுரம் காய்கறி மார்கெட் முன்பு செந்தில்நாதனை வெட்டிக்கொலை செய்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து கும்பகோணம் தாலுக்கா போலீஸார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் லெட்சுமணன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ராமர் தலைமறைவாகி விட்டார். அவர் எங்கு இருக்கிறார் என தெரியாத நிலையில் போலீஸார் அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, கொலை வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, விக்னேஷ், இளங்கோவன், பாண்டி ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், மதுரையை சேர்ந்த கார்த்திக், கொரநாட்டுகருப்பூரை சேர்ந்த கார்த்திக், தாராசுரம் மூர்த்தியை சேர்ந்த மூவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கொலை வழக்கில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!