வா.செ.குழந்தைசாமி ஜூலை 14, 1929ல் கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில், தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் உயர்படிப்பைத் தொடர்ந்தார். இவரது ஆய்விற்காக இல்லினாயிசு பல்கலைக்கழகத்திடமிருந்து நீர்வளத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நீர்வளத்துறை இலக்கியத்தில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இவர் உலக அளவில் நீர்வளத்துறையில் பல குறிப்பிடத்தக்க பதவிகள் வகித்துள்ளார். பல ஆய்வுக்குழுக்களிலும், திட்டக்குழுக்களிலும் பங்கேற்றுள்ளார். பொறியியல் கல்வியில் ஆர்வம் கொண்ட இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளார்.
குழந்தைசாமி, குலோத்துங்கன் என்ற புனைப்பெயரில் பல கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவை தவிர ஆங்கிலத்திலும், தமிழிலும், பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் தனது ஆறு கவிதைத் தொகுப்புகள் மற்றும் ஏழு கட்டுரைகளுக்காக 1999ம் ஆண்டு தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவியோடு சென்னை ஆசியக் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இவர் உள்ளார். தமிழ் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்புகளைப் பாராட்டி சாகித்ய அகாடமி விருது வழங்கியுள்ளது. மேலும், கல்வி மற்றும் அறிவியல் துறைகளில் இவரது பங்களிப்பிற்காக பத்மசிறீ விருது 1992ம் ஆண்டும், பத்மபூசண் விருது, 2002ம் ஆண்டும் வழங்கப்பட்டது. இவரது தமிழ்ப் படைப்புகளுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு 1980ம் ஆண்டு கௌரவ முனைவர் பட்டமளித்தது.
நீர்வளத்துறையில் இவருடைய கண்டுபிடிப்பை குழந்தைசாமி மாதிரியம் என அழைக்கிறார்கள். குழந்தைசாமி பற்றி அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் ஆ.ஜான்சன் கென்னடி அவர்கள் “முனைவர் வா.செ.குழந்தை சாமியின் தமிழியற்பணி-ஓர் ஆய்வு” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பத்மசிறீ, பத்மபூசண் விருது பெற்ற வா.செ.குழந்தைசாமி டிசம்பர் 10, 2016ல் தனது 87வது அகவையில், சென்னையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









