அமைச்சர் வேலுமணி காவல்துறையைப் பயன்படுத்தி, அதிகார அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்:-மு.க.ஸ்டாலின்..
“ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, ஊடகத்தினர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்”
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை !
கொரோனா தொற்றினால் பொதுமக்களும், ஊடகத்தினரும் பாதிப்படைந்து வரும் நிலையில், அவர்களைப் பாதுகாக்கும் பணியில் போதிய கவனம் செலுத்தாமல், ஊடகத்தினரைப் பழிவாங்கும் செயல்பாடுகளில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருவது கண்டனத்திற்குரியது.
கோவையில் தூய்மைப் பணியாளர்கள் அதிகாலை 5.30 மணி முதலே வேலைபார்த்து வரும் நிலையில், பகல் 11 மணிவரை அவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்பதில் தொடங்கி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என்பதையும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் வேலுமணி களத்திலேயே இல்லை என்பதையும், தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் அவர்கள் சுட்டிக்காட்டியதை, “சிம்ப்ளிசிட்டி” இணைய இதழ் வெளியிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக , பத்திரிகையாளர்கள் ஜெரால்டு மற்றும் பாலாஜி இருவரையும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்துச் சென்று பலமணி நேரம் அடைத்து வைத்திருந்ததும், அதன்பின்னர் இரவு நேரத்தில் சிம்பிளிசிட்டி பதிப்பாளரும் நிர்வாக இயக்குநருமான ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதும் சட்டவிரோத செயல்பாடாகும்; ஆணவ அதிகாரத்தின் வெளிப்பாடாகும்.
ஊடகத்தினர் மீது வன்மம் கொண்டு, ஏற்கனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செயல்பட்ட நிலையில், தற்போது முதலமைச்சரின் நிழலாக வலம்வரும் அமைச்சர் வேலுமணியும் காவல்துறையைப் பயன்படுத்தி, அதிகார அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடுவதை தி.மு.கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பேரிடர் நேரத்தில், இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, சிம்பிளிசிட்டி பதிப்பாளரை விடுவித்து, ஊடகத்தினர் இடையூறின்றி சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திட வேண்டும்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









