இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1071 ஆக உயர்வு:-கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 71 ஆக அதிகரித்துள்ள நிலையில், இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 130 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தற்போது வரை கொரோனா தொற்றினால் ஆயிரத்து 71 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் 6வது உயிரிழப்பாக 45 வயது நபர் பலியாகியுள்ளார். மேற்குவங்கத்தில் 2வது பலியாக காலிம்போங்க் பகுதியை சேர்ந்த 54 வயது பெண் உயிரிழந்துள்ளார். சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்து சென்ற பெண் உயிரிழந்ததை அடுத்து அவரது மகளும், அவருக்கு சிகிச்சையளித்த சென்னையை சேர்ந்த மருத்துவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 130 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்புகள் இதுவாகும்.

இதனிடையே இன்று மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 5 பேர், மும்பையில் 3 பேர், நாக்பூரில் இருவர், நாசிக் மற்றும் கோலாப்பூரில் தலா ஒருவர் என மேலும் 12 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 215ஆக அதிகரித்துள்ளது.

அதற்கடுத்தபடியாக கேரளாவில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் இதுவரை 75 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வேலையிழந்த சுமார் 27.5 லட்சம் தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் 611 கோடி ரூபாய் உதவித்தொகையை நேரடியாக செலுத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில், நேற்றிரவு மட்டும் கொரோனா அறிகுறிகளுடன் 85 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை அங்கு 106 பேர் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே ஆர்.எம்.எல் மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளித்த 14 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

செவிலியர் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் தற்போது வரை 72 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மேலும் 7 பேருக்கும், உஜ்ஜயினில் ஒருவருக்கு என 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தூரில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ள 32 பேருடன் சேர்த்து அம்மாநிலத்தில் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், தற்போது வரை நாடு முழுவதும் 99 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!