உலகளவில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸ் பரவுதல் பற்றி கிளிபிள்ளைக்கு சொல்வது போல் பலமுறை எடுத்துக்கூறியும் அதனை பொதுமக்கள் அலட்சியம் செய்வது வேதனை தரும் வகையில் உள்ளது.
அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவு ஏற்படாததால் கொரோனாவை பற்றி அவர்கள் கவலைகொண்டதாக தெரியவில்லை. வழக்கம்போல் தங்கள் பணிகளை செய்யவேண்டும், கடைவீதியில் நான்கு பேருடன் அமர்ந்து பேச வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையை தங்களது உடல்நலத்தில் அவர்கள் காட்டுவதாக தெரியவில்லை. இதை ஏதோ குறைசொல்வதாக எண்ணத் தேவையில்லை. சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர் நண்பர் ஒருவர் கண்கூடாக பார்த்து நம்மிடம் தெரிவித்தது.
மேலும்,இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தும் கொடிய நோயாக திகழும் கொரோனா வைரஸ் தாக்கினால் அதற்கு மருந்து மாத்திரைகள் இல்லை என்பதை கிராமப்புற மக்கள் அறியவில்லை. ஒரு ஊசியை போட்டு நான்கு மாத்திரைகளை வாங்கி விழுங்கினால் சரியாகிவிடும் என்ற எண்ணம் தான் பெரும்பாலானோருக்கு உள்ளது. நகரங்களை பொறுத்தவரை கொரோனா பற்றிய விழிப்புணர்வு மிகுதியாக இருப்பதால் அவர்கள் அரசு கூறும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வீடுகளில் இருக்கின்றனர்.
வேகமாக பரவும் கொரோனா வைரஸ்.. அமெரிக்கா செய்த அதே தவறை செய்யும் இந்தியா.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள் 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகளில் என்னதான் கொரோனாவை பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்பை பற்றியும் தொடர்ந்து கூறினாலும் அது கிராமப்புற மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்பதே நிதர்சனம். காரணம் பெரும்பாலானோர் சீரியல்கள் ஒளிபரப்பாக கூடிய தொலைக்காட்சி சேனல்களில் மூழ்கியிருப்பது. இதனால் அரசு மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பணி என்னவென்றால், பழையமுறையில் ஆட்டோ, கார்களில், குழாய் ஸ்பீக்கர்களை கட்டி கிராமங்கள் தோறும் கொரோனாவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மைக் மூலம் அறிவிப்பாளரை வைத்து கொரோனாவின் ஆபத்து பற்றி விளக்க வேண்டும்.
இத்தாலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை நினைக்கும்போதே நம்மை குலைநடுங்க செய்கிறது. இந்த சூழலில் இந்தியாவை கொரோனாவில் இருந்து முழுவதும் மீட்டெடுக்க மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்களாகிய அனைவரும் ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே அது வெற்றியை தரும். அலட்சியமும், அஜாக்கிரதையும் சீனாவையும், இத்தாலியையும் இன்று எந்த நிலைக்கு தள்ளியுள்ளது என்பதை சிந்தித்து, சிறிது காலத்திற்கு ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்திருப்பது காலத்தின் கட்டாயமாகும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









