கொரானாவுக்கு மருந்து தயாரித்து சுய பரிசோதனை செய்து பார்த்த, பிரபல மருந்து கம்பனியின் மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்..

கொரோனாவுக்கு மருந்து தயாரிப்பதாக கூறி சுய பரிசோதனையில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவன பொது மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது, சுஜாதா பயோடெக் நிறுவனம். இந்த நிறுவனம்தான், நிவாரண் 90 என்ற பிரபல மருந்தை தயாரிக்கிறது. வெல்வெட் ஹெர்பல் ஷாம்பு, மெமரி விட்டா போன்றவையும், இந்த நிறுவன தயாரிப்புதான். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார். மேலாளராக இருந்தவர், சிவநேசன் (47). சிவநேசன் சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர். வேதியியல் துறையில், முதுகலை படிப்பு முடித்தவர். சுஜாதா நிறுவனத்தில் இவர் 27 ஆண்டுகளாக பணியில் இருந்தவர்.

நிவாரண் 90 தயாரிக்கும் தொழிற்சாலை, உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ளது. பொதுவாக அங்குதான் சிவநேசன் இருப்பார். ஆனால், சென்னை வந்த சிவநேசன், ஊரடங்கால், காசிப்பூர் நிறுவனத்திற்கு திரும்ப முடியவில்லை. இந்த நிலையில்தான், கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கலாம் என நிறுவன உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார் முடிவு செய்து, அதை சிவநேசனிடம் கூறியுள்ளார்.

எனவே, கடந்த ஒரு மாத காலமாக தியாகராயநகரில் உள்ள டாக்டர் ராஜ்குமார் வீட்டில் வைத்து மருந்து தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே, சளி, தொண்டை கரகரப்பு போன்றவற்றுக்கு மருந்து தயாரித்த நிறுவனம் இது என்பதால், அந்த பார்முலாவை வைத்து, கொரோனாவுக்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகிறது.

சோடியம் நைட்ரேட்டை பயன்படுத்தி, புதிய வேதியியல் கரைசலை உருவாக்கியுள்ளனர். இந்நிறுவனத்தில் எந்த மருந்து தயாரித்தாலும், அதை சிவநேசன்தான் உட்கொண்டு சுயபரிசோதனையில் ஈடுபடுவது வழக்கமாம். எனவே இந்த மருந்தையும் உட்கொண்டு, ராஜ்குமாருக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

சிவநேசன் அதிக அளவு உட்கொண்டதால் சற்று நேரத்தில் அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதாம். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிவநேசனை கொண்டு சென்றுள்ளனர். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மருந்து கரைசலை குறைவாக உட்கொண்டதால், ராஜ்குமார் சிகிச்சைக்கு பிறகு நலமடைந்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!