மீண்டும் கொரோனா தொற்று- தனியார் பள்ளிகளில் கல்விகட்டணம் செலுத்த பெற்றோர் தயக்கம்!
தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அடுத்த வகுப்பிற்கு மாறிச்செல்லும் மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியதால் பள்ளிகள் மூடப்பட்டன.
ஆனாலும் அந்த ஆண்டிற்கான கல்வி கட்டணம் பெரும்பாலான பள்ளிகளில் வசூலிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளில் ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்குள் அடுத்த கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டு விடும்.
இதனால் கடந்த வருடம் பெரும்பாலான பெற்றோர்கள் கல்வி கட்டணம் செலுத்தி விட்டனர். ஆனால் தொற்று பாதிப்பால் ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டன. மாணவர்கள் வீடுகளில் இருந்து படித்தனர்.
கல்வி கட்டணம் செலுத்தாத பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் கட்ட அறிவுறுத்தியது. ஆனால் பள்ளிகள் திறக்கப்படாததால் கல்வி கட்டணம் செலுத்துவதில் சலுகை அளிக்கப்பட்டது.
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் வீடுகளில் இருந்தே படித்து வருகிறார்கள். 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட 2 மாதத்தில் மீண்டும் மூடப்பட்டன.
கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியதால் பிளஸ் 2 வகுப்பு தவிர மற்ற வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அடுத்த வகுப்பிற்கு மாறிச்செல்லும் மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகள், கல்வி கட்டணம் வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தற்போது தொற்று பரவுவது அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை. மீண்டும் ஆன்லைன் வழியாகவே படிப்பதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் கல்வி கட்டணம் வசூலிப்பதில் வேகம் காட்டி வருகிறார்கள். தேர்தல் முடிந்த உடன் பள்ளி இறுதி தேர்வுகள் நடைபெறுகின்றன. அதற்குள்ளாக கல்வி கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆனால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அடுத்த ஆண்டும் இதே நிலை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி பெரும்பாலான பெற்றோர்கள் கல்வி கட்டணம் செலுத்த தயக்கம் காட்டுகிறார்கள்.
ஒரு பகுதி கட்டணத்தை மட்டும் ஒரு சிலர் செலுத்தி உள்ளனர். முழுத்தொகையை செலுத்த முன்வராததால் தனியார் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் அடிப்படை செலவுகளை எதிர்கொள்ளுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


You must be logged in to post a comment.