புதிய சிறப்பு அதிகாரியை மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் உடனடியாக நியமித்தால், கொரோனா தடுப்புப்பணிகளை முழு வீச்சில் ஒருங்கிணைக்க வசதியாக இருக்கும் என்று காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மின்னஞ்சல் வழியாக அவர் அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கையின் விவரம் வருமாறு:
தமிழக சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்தபடி நாகப்பட்டினத்தில் இருந்து பிரித்து புதிய மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக மயிலாடுதுறை மாவட்ட மக்கள் 12 லட்சம் பேரின் சார்பாகவும் மனம் நிறைந்த நன்றியைத் தமிழக அரசுக்கும் மண்புக்கு முதலமைச்சருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த நேரத்தில் மற்ற மாவட்டங்கள் அறிவித்தபோது அதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியைச் சிறப்பு அலுவலராக நியமித்ததைப் போன்று புதிய மயிலாடுதுறை மாவட்டச் சிறப்பு அதிகாரியை எந்த தாமதமும் இன்றி நியமிக்கவேண்டும். அப்போதுதான் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றுநோய் தடுப்புப்பணிகளை மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.
ஏற்கனவே புதிய மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரியோ, மாவட்ட தரத்திலான அரசு மருத்துவமனையோ, போதுமான அவசர சிகிச்சை வசதிகள் கொண்ட தனியார் மருத்துவமனைகளோ இல்லாத நிலையில் மற்ற எந்த பகுதியையும் விட மயிலாடுதுறை மாவட்டத்தில் கூடுதல் கவனத்தோடு கொரோனா தடுப்புப்பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. நிலைமை இப்படி இருப்பதால் ஆட்சியர் அளவிலான ஐ.ஏ.எஸ் அதிகாரி இருந்தால் மட்டுமே இந்தப் பணிகளைத் தொய்வின்றி ஒருங்கிணைக்க முடியும். தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். எனவே எவ்வித தாமதமும் இல்லாமல் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரியைத் தமிழக அரசு நியமிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெளிவாக அறிவித்த பிறகும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இடம் பெறுகிற பகுதிகள் என்ற பெயரில் பக்கத்து மாவட்டங்களில் இருக்கும் ஊர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். இதனால் அந்தப் பகுதி மக்களிடையே தேவையற்ற பதற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் இடம் பெறுகிற ஊர்களைப் பற்றிய தெளிவான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள அவசரக்கடிதத்தில் காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன் தெரிவித்துள்ளார் இரா. யோகுதாஸ். மயிலாடுதுறை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









