கீழக்கரை நகராட்சி கடந்த 6 மாத காலமாக அரசியல் வாதிகளின் கைகளில் பொறுப்புகள் இருந்த காலத்தை விட தற்போது துரிதமாக நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்றால் நிச்சயமாக மிகையாகாது. ஆனால் பொது மக்களின் பார்வையில் பார்க்கும் பொழுது நகராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்கை கையாள்கிறதோ என்ற எண்ணம் எழக்கூடும், ஆனால் பிரச்சினையின் ஆணி வேரை ஆராய்ந்து பார்க்கும பொழுது பிரச்சினையின் கோணமே வேறு விதமாக இருக்கிறது.
இரு கைகள் சேர்ந்தால்தான் ஓசை எழுப்ப முடியும், அது போல் நகராட்சி நிர்வாகமும் சிறப்பாக செயல்பட, ஒவ்வொரு தனி மனிதனுமாக இணைந்து பொதுமக்களின் ஒத்ததுழைப்பு அளித்தாலே ஒழிய நிச்சயமாக எந்த ஒரு பிரச்சினைக்கும் பலன் காண முடியாது.
கடந்த ஆறு மாதங்களில் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பிரச்சினைகளை பல சமுதாய அமைப்புகளும், நேரடியாகவும், வலைதளம் மூலமாகவும் நகராட்சி நிர்வாகத்துக்கு சுட்டிக்காட்டிய பொழுது அனேக பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
அதே போல் பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் தீர்க்க முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது. உதாரணமாக சாலையோர ஆக்கிரமிப்பு, சுகாதாரப் பிரச்சினை கட்டிடக்காரர்களால் தெருக்களிலும் நடு ரோடுகளையும் ஆக்கிரமித்துக் கொட்டப்படும் கட்டுமான சாமான்கள் என்று அடுக்கி கொண்டே போகலாம்.

இது குறித்து கீழக்கரை நகராட்சி ஆணையர் சந்திரசேகர் நம் கீழை நியூஸ் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு பிரத்யேகமாக நகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சிலவற்றையும் பட்டியலிட்டார். அவர் தெரிவித்த விளக்கம் மிகவும் ஆழ்ந்து சிந்திக்க கூடியதாகவும் ஒவ்வொரு தெருக்களிலும் அமைந்து இருக்கும் சமுதாய அமைப்புகள் தங்களின் தெரு ஜமாத்தினருடன் இணைந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே சுகாதாரப் பிர்ச்சினைக்கும், கட்டுமான பொருட்களின் ஆக்கிரமிப்புக்கும் நிரந்தர தீர்வு காண முடியும் என்பது தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. அவர் நம்மிடம் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வலியுறுத்திய சில விசயங்கள் உங்கள் பார்வைக்கு:-
- கீழக்கரையில் அதிகமாக வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினர் இருக்கிறார்கள் ஆகையால் பூட்டி இருக்கும் வீடுகளுக்கு டெங்கு நோய் ஒழிப்பு தடுப்பு மருந்து அடிக்க தடையாக இருக்கிறது. அதையும் மீறி அந்த வீடுகளுக்கு பொறுப்புதாரர்கள் இருந்தாலும், வீட்டைத் திறந்து மருந்து அடிப்பதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை. எங்களின் சமீபத்திய கணிப்புபடி பூட்டிக் கிடக்கும் வீட்டில் தேங்கியிருக்கும் தண்ணீர் மூலமாகவே டெங்கு கொசுக்குள் அதிகமாக பரவுகிறது.
- குறிப்பிட்ட இடைவெளியில் வீடுகளுக்கு மருந்து தெளிக்க சென்றாலும், கிணற்றில் மருந்து செலுத்தாமலே கையெழுத்திட்டு நகராட்சி ஊழியர்களை திருப்பி அனுப்புகிறார்கள்.
- முறையாக பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைத்து இருந்தும் குப்பைகளில் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் வைப்பதில்லை அல்லது நகராட்சி வண்டிகள் வரும் பொழுது குப்பைகளை கொட்டாமல், அவரவர் வசதிக்கேற்ப வீட்டிற்கு அருகிலேயே கொட்டும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால் அபாயகரமான தொற்று நோய்கள் பரவுவதற்கு காரணமாக உள்ளது.
- கீழக்கரை நகரில் பல இடங்களில் சாக்கடை வாருகால் மூடிகளை சிலர் நள்ளிரவு நேரங்களில் உடைத்து, தாங்கள் சிரமமின்றி கழிவு நீரை ஊற்றுவதற்கு வழி செய்து கொள்கின்றனர். இது சம்பந்தமாக பலமுறை சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொண்டும் மறுபடியும் திரும்ப சிலர் செய்கின்றனர்.
- சமீபத்தில் தெருக்களில் கழிவு நீரை திறந்து விடும் ஒரு வீட்டை அணுகிய பொழுது ஊழியர்களை தகாத வார்த்தையில் திட்டியது மட்டுமல்லாமல் தீய சக்திகளை விட்டு செய்வினை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுகிறார்கள் இது போன்ற நேரங்களில் அக்கம் பக்கத்தினரும் தட்டிக் கேட்க தயக்கம் காட்டுகிறார்கள்.
- டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக நில வேம்பு கசாயம் நகராட்சியால் வழங்கும் பொழுது அதைப் பருகாமல் எங்கள் கண் முன்னாடியே தூர எறியும் சம்பவங்களையும் நாங்கள் தினமும் சந்தித்து வருகிறோம்.
- சமீபத்தில் வீடு கட்டும் பொருட்களை தெருவில் ஆக்கிரமித்து கொட்டியிருந்ததை நீக்க சொல்லி நடவடிக்கை எடுக்க முயன்ற பொழுது அத்தெரு மக்களே நாங்கள் செய்யும் பணிக்கு இடையூறு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க விடவில்லை எங்களையும் தகாத வார்த்தையில் வசை பாட ஆரம்பித்து விட்டார்கள். பல தடவை விதிமீறி கொட்டிய மணல் உள்ளிட்ட கட்டிட பொருள்களை நகராட்சி வாகனத்தை பயன்படுத்தி அள்ளி சென்றோம். அப்போதும் கூட தங்கள் செயல்பாடுகளை பொதுமக்கள் மாற்றி கொள்ள மறுக்கிறார்கள்.
- கீழக்கரை நகரில் செயல்படும் கோழி, ஆட்டிறைச்சி கடை உரிமையாளர்கள் கறிகளை வெட்டி அதன் சவ்வு பகுதிகளை சாலையில் வீசி எறிகின்றனர். இதனால் நாய்கள் கீழக்கரை நகரை விட்டு செல்ல மனமில்லாமல் இங்கேயே சுற்றி திரிகிறது. இவர்களை பல முறை எச்சரித்தாகி விட்டது. ஆனால் கறித்துண்டு கழிவுகளை வீதிகளிலே தான் வீசி எறிகின்றனர். அப்புறம் நாய்கள் வராமல் என்ன செய்யும்..?
இப்படி பலவகைகளில் பொதுக்களிடம் இருந்து அவர்களின் ஒத்துழைப்புகள் குறைவாகவே இருக்கிறது. இங்கு சில விஷயங்களை மட்டுமே தங்களிடம் பகிர்ந்திருக்கிறோம்.
கீழக்கரை நகரை முன்மாதிரி நகராக மாற்ற நகராட்சி சார்பாக ஊழியர்கள் அனைவரும் அனுதினமும் உழைத்து கொண்டிருக்கிறோம். பொதுமக்களின் மேலான ஒத்துழைப்பு மட்டும் முழுமையாக கிடைத்திடும் போது நம் நகரம் நோய் நொடி இல்லாத, தன்னிறைவு பெற்ற மகத்தான சிறப்புற்ற நகராக உருவெடுக்கும். நகராட்சி முன்னெடுக்கும் அனைத்து விஷயங்களிலும் கீழக்கரை நகர் மக்களின் மேலான ஒத்துழைப்பினை எதிர்நோக்கி இருக்கிறோம்” என்று கனத்த இதயத்தோடு நம்மிடையே உரையாடினார்.
ஆக மேற்கண்ட விசயங்களை நாம் ஆராய்ந்து பார்க்கும் பொழுது, கீழக்கரையில் சுகாதாரத்தை எற்படுத்தவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் நகராட்சி நிர்வாகத்தினரால் மட்டுமே செய்து விட முடியாது என்பது தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. நம் ஊரின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் பொதுமக்களும் முழு அளவில் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே தீர்வு காண முடியும்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவார்களா?? கீழை நகரை சுகாதாரமான நகராக மாற்ற முடியுமா??

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









