நமது ஊர் கீழக்கரையில் வரும் காலங்களில் மருத்துவமனைகளை மேம்படுத்தவும் புதிய மருத்துவமனைகள் ஏற்படுத்தவும் பலர் கோரிக்கை விடுப்பதும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வரும் செய்திகள் மிகுந்த பாராட்டுக்குறியது. காலங்காலமாக நம்பி சென்ற மருத்துவமனைகள் இந்த பேரிடர் காலத்தில் கைவிட்டதால் ஏற்பட்ட மாற்றம் வரவேற்புக்குறியதே. ஆனால் உண்மையில் மருத்துவமனைகள் ஏற்படுத்துவதால் மட்டும் ஊர் வளர்ச்சியை எட்டிவிடுமா?
40,000 மக்கள் தொகை கொண்ட கீழக்கரையில் கல்வியறிவு சதவிகிதம் 93.31%. தேசிய அளவில் தமிழகத்தின் சதவிகித்தை காட்டிலும் அதிகம். 96.24% ஆண்களும் 90.20% பெண்களுக்கு கல்வியறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். 150 ஆண்டுளுக்கு முன்னமே பள்ளி ஆரம்பித்த ஊர் இந்த நிலையை அடைந்ததில் ஆச்சரியம் அல்ல.
ஆனால் நம்மில் எத்தனை மருத்துவர்கள், காவலர்கள், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள்,? விரல்விட்டு எண்ணிவிடலாம்.
கடல்சார் வளங்களையும் தொழிலையும் பிராதனமாக கொண்டுள்ள கீழக்கரையில் அதிகளவிலான பொறியாளர்கள் உள்ளபோதும் கடல்சார் பொறியாளர்கள் மிக குறைந்த அளவிலேயே இருக்கின்றனர். தளவாடங்கள், கப்பல் வாணிபம் போன்ற துறைகளில் உள்ள பட்டப்படிப்புகளை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்பது கூட இல்லை.
இங்கே கல்வி என்பது ஆண்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி சீட்டாகவும், பொருளாதார ஈட்டும் வழியாகவும் மட்டுமே கற்றுக்கொடுக்கப்பள்ளது. இவற்றை தாண்டிய விசாலமான பார்வை நமது ஊர் மாணவர்களிடம் மிக குறைவாகவே உள்ளது.
ஆண்களுக்கே இந்த நிலைமை என்றால் பெண்களின் நிலை சொல்லி தெரிய வேண்டியதில்லை. பெயருக்கு பின்னால் போட்டு கொள்வதற்கும் வீட்டில் பாடம் சொல்லி கொடுப்பதற்காத்தான் கல்வி என்ற மனநிலையிலேயே பெரும்பாலான பெண்கள் வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இங்கு பெண்கள் அதிகபட்சமாக அனுமதிக்கப்படுவது ஆசிரியைப் பணிசெய்யவதற்கு தான். சில துறையில் சாதித்துள்ள நமது ஊர் பெண்களை நீங்கள் எடுத்துக்காட்டாக கூறலாம். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் போராடியே இந்த நிலைமையை அடைந்துள்ளனர். பெற்றோர் அனுமதி கிடைக்காமலும், குடும்பத்தினர் ஒத்துழைப்பு இல்லாததாலும் நம்மிடையே பலர் தங்கள் திறன்களை மறைத்தும், மறந்தும் காலத்தை வீணாக்கிகொண்டிருக்கிறார்கள்.
// இந்த நிலைகளை மாற்ற வேண்டியதுதான் நமது முதல் படியாக இருக்க வேண்டும்….
முதலில் நமது சமுதாய மக்களின் மனநிலையில் மாற்றங்கள் தேவை….//
பள்ளிபடிப்பும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கல்லூரி படிப்பு மட்டும் போதுமானதாக எண்ணாமல் அந்தந்த துறை சார்ந்து மேற்படிப்பு கற்க விரும்பும் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.இது பெண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.
பெண்கள் வெளியூர் சென்று படிப்பதையும் பணிக்கு செல்வதையும் கௌரவ குறைச்சலாக, அப்பெண்களை குற்றவாளிகளைப் போல் பார்க்கும் மனநிலை அடியோடு ஒழிய வேண்டும்.
பெற்றோர்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு நம்மிடையே இருக்கும் கல்வி நிறுவனங்களுக்கே அதிகம் உள்ளது.
என் பள்ளிப்பருவத்தில் ஆங்கில மொழித்திறனை பெற்றிருப்பதும் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதுமே வெற்றியாக கருதப்பட்டது. அதை நமது ஊரின் பல பள்ளிகள் சிறப்பாகவே செயல்படுத்தின. ஆனால் இன்று காலம் மாறுகிறது அதற்கேற்றார் போல் மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.
மருத்துவம், பொறியியல், கணிணி போன்ற துறைகளோடு இன்னும் பலதுறை சார்ந்த கல்வியை பற்றிய விசாலமான பார்வையை உருவாக்க வேண்டும்.
பாடம் கற்பிப்பதோடு மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்கள் குறிக்கோள்களை அடைய தேவையான ஆலோசனைகளை வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
உலக அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் தளங்கள், கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்களின் வழிகாட்டுதல் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.
இப்போது பல பள்ளிகள் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இருப்பினும் இவற்றை வலுப்படுத்தி இவற்றில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும்.
ஊரில் நூலகம் அமைப்பது, படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் திறன்வாய்ந்த மாணவர்களுக்கு பொருளாதார உதவிகள் செய்வதற்கு ஊரின் முக்கியஸ்தர்கள், வசதி பெற்றவர்கள் முன் வர வேண்டும்.
கல்வியாளர்கள், ஊர் தலைவர்கள், நமது ஊரை சார்ந்த பல துறை வல்லுனர்கள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்திட்டங்கள் வகுத்து நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இது ஓரீரு ஆண்டுகளில் கிட்டகூடிய வெற்றியல்ல. தேவையான ஆய்வுகளையும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் அவசியமான மாற்றங்களையும் இப்பொழுது இருந்தே செயல்படுத்த தொடங்கினால் இறைவனின் கிருபையால் நிச்சயம் வருங்காலத்தில் சிறந்த சமூகமாக நாம் உருவாக இயலும்.
”தீர்க்கமாக நாமும் இணைந்து சிந்திப்போம்… அழகிய விடை காண்போம்..”
கட்டுரையாளர் : பஹ்ஜத் குபுரா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









