கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக பதிவு செய்துள்ள பொதுமக்கள் நீண்டகால காத்திருப்புக்கு ஆளாவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இணையதளத்தில் பதிவேற்ற மிகவும் காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், இணையதள பதிவேற்றம் மிகவும் தாமதமாக நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
கீழக்கரை தாலுகாவில் தில்லையேந்தல், காஞ்சிரங்குடி, மாயாகுளம், ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் அடங்கியுள்ளன. ஆனால் பட்டா உள்ளிட்ட அரசு ஆவணங்கள் பெறவும் சான்றிதழ்கள் பெறவும் முறைப்படி விண்ணப்பித்தால் அங்கு எந்த பணியும் நடைபெறுவதில்லை
மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரடியாக அணுகினால் பட்டா கிடைப்பதில்லை என்றும், புரோக்கர்கள் மூலம் பணம் கொடுத்தால் உடனே பட்டா கிடைப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பட்டா பதிவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் மிகவும் காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், இடைத்தரகர்கள் மூலம் அங்கு பணி புரியும் அரசு அலுவலர்களுக்கு வருவாய் கிடைக்கும் பணிகளை மட்டும் செய்து வருவதாக தெரிய வருகிறது.
அதுமட்டுமின்றி, கீழக்கரை தாலுகா அலுவலகம் நகரில் இருந்து 3-4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் பொதுமக்கள் அங்கு சென்று வர ஆட்டோவுக்கு செலவு செய்து சென்று வருவதாகவும், ஆனால், அவ்வாறு செலவு செய்து அலைந்தாலும் அங்கு முறையாக எந்த பணியும் நடப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பட்டா இணையதளங்களில் ஏற்றுவதற்கு அதிகாரிகள் முறையாக தகவல் வழங்குவதில்லை என்றும், சான்றிதழ்கள் முழுமையாக இல்லை என பொதுமக்களை அலைக்கழிப்பு செய்வதாகவும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.
எனவே, பட்டா விசயத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவிட்டும் முறைப்படுத்தாத அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், பட்டாவுக்காக பதிவு செய்துள்ள அனைவருக்கும் பட்டா கிடைத்திட வழிவகை செய்த செய்ய வேண்டும், அனைத்து பட்டாக்களையும் இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியு
றுத்துகின்றனர்.
You must be logged in to post a comment.