கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய பல் மருத்துவப் பிரிவு கடந்த சில மாதங்களுக்கு முன் நவீன வசதிகளுடன் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கீழக்கரை நகரில் பல் மருத்துவம் என்பது என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.


கீழக்கரை நகரில் இருந்து பல் மருத்துவம் பயின்ற கிழக்குத் தெருவை சேர்ந்த டாக்டர்.ஹஃப்ஸா பாத்திமா, டாக்டர்.சில்வியா ஜெயத்துடன் இணைந்து கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் பல் மருத்துவ பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.

‘‘பல் போனா சொல் போச்சு’ என்பார்கள். இந்தப் பொன் மொழியின் அவசியத்தை உணர்ந்த நம் முன்னோர்கள் பற்களை சரிவர பராமரிக்க வேண்டும் என்பதை ஆதி காலம் தொட்டு சொல்லி வருகிறார்கள். ஏனெனில், பற்கள் தான் ஆரோக்கியத்துக்கான தலை வாசல்’’ என்பதை இன்றைய மருத்துவ உலகமும் வலியுறுத்தி வருகிறது. பல் ஆரோக்கியமின்மை இதயத்தையும் பாதிக்கும்.
நமது வாய் தான் எல்லாவற்றுக்குமே நுழைவாயில். இந்த வாயிலில் நுழைந்து தான் அனைத்துக் கிருமிகளும் நோய்களும் நம் உடலின் உள்ளே போகும் என்பதால் பற்களை பன்மடங்கு அக்கறையோடு நாம் பராமரிக்க வேண்டும். சரி… இப்போது பற்களை பராமரிப்பது பற்றி பல் மருத்துவம் மற்றும் பல் சீரமைப்பு நிபுணர்களான டாக்டர்.ஹஃப்ஸா பாத்திமா மற்றும் டாக்டர்.சில்வியா ஜெயம் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோமா…?

செய்ய வேண்டியவை :
உணவு சாப்பிட்ட பிறகு ஒவ்வொவொரு முறையும் தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். அப்பொழுதுதான் பல் இடுக்குகளில் உணவு பொருட்கள் தங்காது. தினமும் காலை மற்றும் இரவு படுக்கும் முன் பற்களை துலக்க வேண்டும்.
பற்கள் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்க பிளாஸ் பயன்படுத்தலாம். ஓரல் இரிகேட்டர் என்பது வாயில் தண்ணீரை வேகமாக செலுத்தும் கருவி. இதனை பற்கள் சுத்தம் செய்ய பயன் படுத்தலாம். இவை தவிர வருடத்திற்கு ஒரு முறை பற்களை பல் டாக்டரின் ஆலோசனை படி சுத்தம் செய்வது அவசியம்.
பற்களில் ஏற்படும் மற்றொரு பிரச்சனை வாய் துர்நாற்றம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பற்களில் கறை படிவதால் அல்லது பல் சொத்தை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை அதிகமாக உடம்கொள்வது, தொண்டை, வயிறு அல்லது நுரையீரலில் பிரச்னை போன்றவற்றால் வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் எடுத்துக் கொள்கிறார்களோ, அவ்வளவுக்கு துர்நாற்றம் வீசாது.
பற்கள் எடுப்பாக இருந்தால், அதை கிளிப் போட்டு சரியாக்கலாம். சில சமயம் தாடை எலும்புகள் தூக்கலாக இருக்கும். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். புளோரைட் பாதிப்பால் பற்களின் நிறம் பழுப்பாக இருக்கும். அவர்களின் முக அமைப்புக்கு ஏற்ப பற்களுக்கு மேல் செயற்கையான கேப் போட்டுக் கொள்ளலாம்.
எல்லாவற்றையும் விட முக்கியம் பற்களில் சிறு பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக பல் நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். கண் எரிச்சல், மூட்டு வலி, சரும பிரச்னை இருந்தால் அதற்கு பல் சொத்தையும் ஒரு காரணம் என்பதால் அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொள்ளலாம்.
செய்யக் கூடாதவை :
கடினமான உணவுப் பொருட்களை முன்னால் உள்ள பற்களால் கடிக்கக் கூடாது. கடவாய் பற்களை பயன்படுத்தலாம். முன் பற்கள் அசைவ உணவை கிழித்து சாப்பிட மட்டுமே உதவும்.
பேனா பென்சில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பல்லால் கடிப்பது , பூவின் நார் மற்றும் துணியில் உள்ள நூலை பற்கள் கொண்டு அறுக்கக் கூடாது.புகை, பாக்கு, வெற்றிலை மெல்லுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு புட்டி பால் கொடுக்கும் போது, அவர்கள் சாப்பிட்ட பிறகு, உடனடியாக தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், பற்களில் பாக்டீரியா தங்கி கரை படியும் வாய்ப்பு உள்ளது.
சிறு வயதிலிருந்தே நமது பற்களின் மீது தனி கவனம் செலுத்தி வந்தால் எவ்வளவு வயதானாலும் நம் பற்களைப் பழுதடையாமல் வைத்து கொள்ளலாம்.
சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இரவில் பால், சர்க்கரை சேர்ந்த பால், சாக்லெட், பிஸ்கெட் போன்றவற்றைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி சாப்பிட்டால், வாயைக் கழுவாமல் பல் துலக்காமல் படுக்கக் கூடாது.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று, பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பற்களோ, தாடையோ சீராகச் சரியான வடிவத்தில் வளர்ச்சி பெறாமல் இருந்தால், அதைச் சிறு வயதிலேயே கவனித்து, கட்டுப்படுத்தி முக அழகை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
பொதுவாகவே அதிக அளவு சாக்லெட், ஐஸ்கிரீம், கார்போனேடட் பானங்கள், சிட்ரிக் ஜூஸ்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
வெள்ளை வெளேரென்று இருந்தால்தான் அவை அழகான, ஆரோக்கியமான பற்கள் என்பதில்லை. லேசான பழுப்பு நிறத்தோடு தான் பற்கள் இருக்கும். பல்லில் உள்ள கரையை நீக்க ப்ளீச்சிங் அல்லது லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம்.
பல் தூக்கலாக இருந்தால் ப்ரேசஸ் போட்டுக் கொள்ளலாம். பற்கள் இல்லை என்றால் அதையும் நிரந்தரமாகப் போடலாம். அனைத்து வசதிகளும் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனை பல் மருத்துவ பிரிவில் உள்ளது.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









