இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்டர் வி.மார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கரூர் மாவட்டம் சின்ன பள்ளிவாசல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஜெய்லானி-பாத்திமா தம்பதியினர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த தம்பதியினருக்கு அண்டை வீட்டார் பழக்கத்தின் அடிப்படையில் அவர்களுக்கு கரூரை சேர்ந்த கந்தன் என்கின்ற தோகை முருகன் மற்றும் மகா பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் ரூ.35 ஆயிரம் மதிப்பில் டிவி மற்றும் செல்போன் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். இதற்கான மாதத் தவணைத் தொகையை பொருள் வாங்கிய அண்டை வீட்டாரிடமிருந்து பெற்று கட்டி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அண்டை வீட்டார் தவணையை தராமல் வெளியூர் சென்றுவிட்டதால் மேற்படி தவணைத் தொகையை அவர்கள் செலுத்தவில்லை. இதுகுறித்து வீடு தேடிவந்த கந்தன் பைனாஸ் நிறுவன பணியாளர்களிடம் ஜெய்லானி மனைவி பாத்திமா தெரிவித்தபோது, அதனை ஏற்காமல் தங்கள் நிறுவனத்துக்கு அழைத்து மிகவும் மோசமான முறையில் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, வீட்டில் உள்ள டிவி மற்றும் தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகை ரூ.1000 யும் எடுத்துச் சென்றதோடு, மீதியுள்ள தொகையை வட்டிக்கு வட்டி சேர்த்து கட்ட வேண்டும் என மிரட்டிச் சென்றுள்ளனர். அண்டை வீட்டில் உள்ளவர்களுக்காக தவணை முறையில் பொருள் வாங்கி கொடுத்ததற்காக, பைனான்ஸ் நிறுவனத்தினரால் தான் அசிங்கப்படுத்தப்பட்ட நிகழ்வை எண்ணி, மன உளைச்சலில் இருந்த இரண்டு குழந்தைகளின் தாயான பாத்திமா, எலி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்வதோடு, தமிழக அரசு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில், குறிப்பாக கரூர் மாவட்டத்தில் ஏழை-எளிய மக்களை குறிவைத்து ஏராளமான நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பணம் மட்டுமின்றி தவணை முறையில் பொருட்களை அளித்தும் நிதி நிறுவனங்கள் வட்டி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. பொருட்கள் வாங்க வரும்போது கனிவு காட்டும் இத்தகைய நிறுவனங்கள், தவணை வசூலில் மூர்க்கத்தனமாக செயல்படுகின்றன. மாத தவணை தவறும் பட்சத்தில் தவணை முறையில் பொருட்கள் வாங்கிய வீடுகளுக்குச் சென்று, பொதுவெளியில் அந்த வீடுகளைச் சேர்ந்த பெண்களை அசிங்கப்படுத்துவது, வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்வது, வட்டிக்கு வட்டி வாங்குவது, அடியாட்களை கொண்டு மிரட்டுவது என மிகவும் அராஜகமான போக்குகளை கையாண்டு வருகின்றனர். ஆகவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் கூடுதல் கவனமெடுக்க வேண்டும் எனவும், அத்தகைய அராஜக நிதிநிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கந்துவட்டி கொடுமை: கரூரில் நிதிநிறுவனத்தின் அராஜகத்தால் இளம் பெண் உயிரிழப்பு! -குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
கந்துவட்டி கொடுமை: கரூரில் நிதிநிறுவனத்தின் அராஜகத்தால் இளம் பெண் உயிரிழப்பு! -குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
You must be logged in to post a comment.