திருவண்ணாமலையில் செய்தி சேகரித்து கொண்டிருந்த செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதை கர்நாடகத்தமிழ் பத்திரிகையாளர் சங்கம் கண்டித்துள்ளது.
இது குறித்து கர்நாடகத்தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தலைவர் முத்துமணி, செயலாளர் மதியழகன் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை, “சென்னையில் இருந்துசேலம் வரை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கும் பசுமைவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து திருவண்ணாமலையில் பொதுமக்கள் நடத்திய போராட்டம் தொடர்பான செய்தியை சேரித்து கொண்டிருந்த சன் நியூஸ் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது அம்மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். ஊடக சுதந்திரத்தை பறிக்கும் வகையில் செயல்பட்ட காவல்துறையின் செயல்பாட்டை கர்நாடகத்தமிழ் பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடகத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துகிறது.
ஊடகச் சுதந்திரம் என்பது, ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகும். சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்பட்டுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திரமான ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது.
இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் பிரிவு 19(1)(அ), ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து குடிமக்களுக்கும் பேச்சுரிமையை கருத்துரிமையை வழங்கியிருக்கிறது. ஆனால், மக்களாட்சியின் மனசாட்சியாக விளங்கும் ஊடகங்களை அடக்கி ஒடுக்கும் போக்கை அரசியல்வாதிகள் காலாகாலமாக செய்துவருகிறார்கள். ஆட்சியில் நடக்கும் மக்களுக்கு எதிரான போக்கை தட்டிக்கேட்கும் உரிமை, அதை மக்களிடம் கொண்டுசேர்க்கும் கடமை ஊடகங்களுக்கு உள்ளது. ஊடகங்கள், நீதிமன்றங்கள், அரசியலமைப்புச்சட்டம் இல்லாவிட்டால் தன்னியல்போடு செயல்படும் மக்கள்விரோதப்போக்கை தட்டிக்கேட்க ஆளில்லா நிலை ஏற்படும். உலக ஊடகச்சுதந்திர தரவரிசைப்பட்டியலில் இந்தியா 138-ஆவது இடத்தில் உள்ளது.
திருவண்ணாமலையில் நடந்துள்ள சம்பவம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் தினந்தோறும் நடப்பதால், இந்தியாவின் மதிப்பை உலக அளவில் குறைத்துவருவதை மறுப்பதற்கில்லை. ஊடகச்சுதந்திரத்தை பலப்படுத்தி, செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள், ஒளிபதிவாளர்களுக்கு உரியபாதுகாப்பு அளிக்குமாறும், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காதவண்ணம் காவல்துறைக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறும் தமிழக அரசை கர்நாடகத்தமிழ் பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது என்றுஅதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல் புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை-சேலம் 8 வழிச்சாலை அமைக்கும் பணி குறித்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே செய்தி சேகரிக்க சென்ற சன் தொலைக்காட்சி செய்தியாளர் செல்வகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் வேலு ஆகியோர் மீது தமிழக காவல் துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதற்கு புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. மக்களை பாதுகாக்கும் மகத்தான பணி காவல் துறை பணி ஆனால் இது போன்று அராஜக செயலில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்ந்து ஊடகவியலாளர்களை தமிழக காவல் துறையினர் தாக்குவதும் இதை ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்ப்பதும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி அமலில் இருக்கின்றதோ என எண்ணத்தோன்றுகின்றது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஊடகங்களின் கருத்துக்களை உள்வாங்கி மக்களை திருப்தி படுத்த வேண்டியது அரசின் கடமை ஆனால் செய்தி சேகரிக்கும் தளத்தில் இருக்கும் பத்திரிக்கையாளர்களை தாக்குவது ஜனநாயக படுகொலையாகும். ஊடகங்களை தனக்கு சாதகமாக செய்தி வெளியிடவேண்டும் என நினைப்பதும் குறைகளை சுட்டிக்காட்டுவோர் மீது அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவதை இனி ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் இது போன்ற செயல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்க மேலும் ஒரு சுதந்திரப்போராட்டத்திற்கு பத்திரிக்கையாளர்களை கொண்டு செல்லும் சூழலை தவிர்க்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும். சன் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









