காஞ்சிரம் மரத்தின் பெயரால் உருவான ஊர் – காஞ்சிரங்குடி…

காஞ்சிரம் மரத்தின் பெயரால் உருவான ஊர் – காஞ்சிரங்குடி. தொன்மைப் பாதுகாப்பு மன்ற துவக்கவிழாவில் தகவல்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள காஞ்சிரங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்ற துவக்க விழா நடைபெற்றது.  விழாவுக்கு தலைமை வகித்த தலைமை ஆசிரியர் கே.ஏ.ஷேக் முஜிபூர் ரகுமான், மாணவர்கள் இப்பகுதியின் பாரம்பரியச்  சிறப்புகளைத் தேடி கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மன்ற ஒருங்கிணைப்பாளர் முகம்மது முகைதீன் வரவேற்றுப் பேசினார்.

இராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு கலந்துகொண்டு அப்பகுதி ஊர்களின் வரலாற்றுச் சிறப்புகளைப் பற்றிப் பேசும்போது,

“காஞ்சிரம் அல்லது காஞ்சிரை எனும் மரத்தின் பெயரால் இவ்வூருக்கு காஞ்சிரங்குடி  எனப் பெயர் வந்துள்ளது. எட்டி எனப்படும் இம்மரம் கசப்புத் தன்மை உள்ள விஷ மரமாகும். ஆனால் இது சித்த வைத்தியத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இம்மரம் இப்பகுதியில் அதிகமாக இருந்ததன் காரணமாக இவ்வூருக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். கி.பி.1756இல் செல்லமுத்து தேவர் என்ற விஜயரகுநாத சேதுபதி  திருப்புல்லாணி வெள்ளையன்சேர்வை சத்திரத்துக்கு இவ்வூரை தானமாக வழங்கியுள்ளார்.

சிவப்பு நிற ஆம்பல் மலர் செங்கழுநீர் எனப்படும். இவ்வூராட்சியில்  இம்மலரின் பெயரால் அமைந்துள்ள செங்கழுநீர் ஓடை எனும் ஊரின் பெயர் தற்போது செங்கல் நீரோடை என வழங்கப்படுகிறது. அதேபோல் அலைவாய்க்கரைவாடி எனும் ஊர்ப்பெயரில் அலைவாய் என்பது கடலையும் வாடி என்பது மீன் உலர்த்தும் இடத்தையும் குறிக்கிறது. கடற்கரை அருகில் அமைந்துள்ள வாடி என்பது இதன் பொருள்” இவ்வாறு அவர் பேசினார்.

உதவி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார். கண்காட்சிக்கு உரிய ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்கள் தோமினிக் லூர்து ராஜ், விஜலா,  ஜாஸ்மின்  ஆகியோர் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “காஞ்சிரம் மரத்தின் பெயரால் உருவான ஊர் – காஞ்சிரங்குடி…

  1. அலைவாய்கரைவாடி = கடல்+பதநீர் பதபடுத்தும் வாடி. மீன் உளர்த்தும் இடம் அல்ல

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!