ஒன்றிய அரசால் மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா அரசியலமைப்பு சாசனத்திற்கும், மக்களுக்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா டிசம்பர் 17ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை திமுக தொடர்ந்து உறுதியாக முழுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சட்ட மசோதா அரசியலமைப்பு சாசனத்திற்கும் கூட்டாட்சிக்கும் எதிரானது. அது மட்டுமல்ல பல்வேறு தேர்தல்களில் மக்கள் தங்கள் விருப்பப்படி அளித்த வாக்குரிமைக்கும் எதிரானதாக இருக்கிறது. மக்கள் பல்வேறு மாநிலங்களில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கு மாநில அரசுகளை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களிடம் இருக்கும் இந்த உரிமையை பறித்து தேர்தல் ஆணையத்திடம் அளித்து, அந்த அரசுகள் எவ்வளவு வருடம் நீடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையமே முடிவு செய்வது என்பது மாநில அரசுகளுக்கும் அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. இந்த மசோதா இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானதாக அமைந்துள்ளது. அதிபர் ஆட்சிக்கு வழி வகுக்கும் இந்த சட்ட மசோதாவை நாங்கள் ஏற்கப் போவதில்லை. முழுமையாக எதிர்க்கிறோம்” இவ்வாறு கனிமொழி கருணாநிதி எம்.பி. தெரிவித்தார்.

You must be logged in to post a comment.