“பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக் காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது” என தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி தெரிவித்துள்ளார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு சிறப்புரையாற்றினார்.





தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் கனிமொழி எம்.பிக்கு வீரவாளை நினைவுப் பரிசாக வழங்கினார். நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட வீரவாளை தொண்டர்களுக்கு மத்தியில் கனிமொழி எம்.பி உயர்த்தி காட்டினார். பொதுக் கூட்டத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி, திராவிடம், திராவிட மாடல் என்று கேட்டாலே அவர்களை கலங்க வைக்கும் ஒரு மாடலாக உள்ளது. ஏனென்றால் நமக்கு பகைவர்கள் நமக்கு எதிராக திராவிடம் என்பதை உடைக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள். திராவிட மாடல் ஆட்சி என்பது அனைவருக்கும் ஆனது. அதனை உடைக்க வேண்டும் என நினைப்பவர்களே நமக்கு எதிராக நிற்கிறார்கள்.
திராவிட மாடலை எதிர்க்க கூடியவர்கள், யாருக்கும் எதுவும் கிடைக்கக் கூடாது என்று நினைக்க கூடியவர்கள். மறுபடியும் இந்த தமிழ்நாடு 200 வருடத்திற்கு முன்னால் எந்த ஒரு நிலையில் இருந்ததோ, அதே இடத்திற்கு கொண்டு போய் நம்மை மறுபடியும் நிறுத்தி விட வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் நாம். எல்லாருக்கும் எல்லாம் என்று நினைக்கிறோம். ஆனால் அங்கு யாருக்கும் எதுவும் கிடையாது நாங்க மட்டும் வைத்துக் கொள்வோம். இது தான் திராவிட மாடலுக்கும் அவங்க மாடலுக்கும் இருக்கக் கூடிய வித்தியாசம்.
எல்லா நிறுவனங்களையும், தொழிற் சாலைகள், சின்ன சின்ன நிறுவனங்களை நிறுத்தி விட்டு இரண்டு பேர் மட்டும் தான் தொழில் நிறுவனங்களை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் எண்ணங்களோடு செயல்படக் கூடியது தான் ஒன்றிய பாஜக ஆட்சி. அந்த இரண்டு பேர் யார் என்பது உங்களுக்குத் தெரியும்.
அதே போல, யாரெல்லாம் இந்த சமூகத்தில் பிறப்பால் உயர்ந்தவர்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டும் தான் கல்வி மற்றும் வாய்ப்புகள் உயர்ந்த பதவிகள். அவர்கள் மட்டும் தான் இந்த நாட்டில் அதிகாரத்தில் இருக்கக் கூடியவர்களாக, போற்றக் கூடியவர்களாக, மதிக்கக் கூடியவர்களாக உள்ளனர். இதை எல்லாம் உடைத்தது தான் திராவிட இயக்கம். யாருக்கெல்லாம் கல்வி வேலை வாய்ப்பில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மறுக்கப்பட்டதோ அவர்களுக்கு எல்லாம் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கித் தந்தது திராவிட இயக்கம்.
தந்தை பெரியார் அவர்கள் மிகப் பெரிய செல்வந்தர், ஆனால், பெரியார் மக்களுக்காகப் போராடி எத்தனை முறை சிறை சென்றாலும் ஒரு முறை கூட நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்காதவர். மக்களுக்காக போராடியதிற்கு எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் தாருங்கள். ஆனால் நான் செய்தது தவறல்ல என சிங்கம் போல கர்ஜித்தவர் பெரியார்.
டங்க்ஸ்டன் திட்டம் திமுக முயற்சியால் கைவிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் வர காரணமாக அந்த திட்டம் குறித்த மசோதாவை ஆதரித்தது அதிமுக. அவர்கள் இதுபற்றிப் பேச எந்த உரிமையும் இல்லை. மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தையும் கை கட்டி ஆதரித்தது அதிமுக அரசு. சட்டமன்ற தேர்தலுக்கு மட்டுமே எடப்பாடி வருவார். பின்னர் எங்குப் போவார் என தெரியாது. இப்படித்தான் இவர்கள் அரசியல் செய்கிறார்கள்.
பணம் தந்தாலும் தராவிட்டாலும் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையில் கைழுத்து போடாது என கூறியவர் நமது தமிழக முதல்வர். 50 ஆண்டு கால அரசியல் பாரம்பரியத் தோடு செயல்பட்டு வரும் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு நிகரான தகுதியான பெயர் சொல்லக் கூடிய தலைவர்கள் தமிழகத்தில் இல்லை.
மாறாக தமிழ் தமிழ் எனக் கூறிக் கொண்டு தமிழ் மொழியையும், தமிழர்களையும் கொச்சைப் படுத்தக் கூடிய, பெரியாரை இழிவுபடுத்தக் கூடிய சில கூலிக் காரர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழலுக்கு நம் முதல்வர் தள்ளப்பட்டு இருக்கிறார். தமிழகத்திற்கு பொழுது போக்கிற்காக ஒரு ஆளுநர் இருந்து வருகிறார். அவர் ஆளுநராக இல்லை அரசியல் வாதியாக செயல்பட்டு வருகிறார்.
மக்களுக்குத் தேவையான திட்டங்களை செய்வதற்கு எந்தவித நிதியையும் ஒன்றிய அரசு கொடுப்பதில்லை. தமிழ் மொழிக்கும், தமிழக மக்களுக்கும் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவுகின்ற கட்சியினரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழலில் திமுக உள்ளது.
பொழுது போக்கிற்காக ஒரு ஆளுநர் இருக்கிறார். அவர் ஒரு ஆளுநரை போல் செயல்படாமல் அரசியல் வாதியாகவும், எதிர்க் கட்சியில் இருப்பவர் போன்று செயல்படுகிறார். தேசிய கீதத்தைப் பாதுகாக்கிறோம் என்று கூறி, அதே தேசிய கீதத்தை அவமதிக்கும் நோக்கிலும், ஆளுநரின் பதவி என்ன அதனுடைய மாண்பு என்ன என்று தெரியாமல் சட்ட மன்றத்தில் இருந்து பாதியிலேயே எழுந்து போய் விடுகிறார். பல்கலைக் கழகங்களுக்கு நிர்வாகிகளை கூட நியமிக்க முடியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நீதிமன்றம் கேட்கும் அளவிற்கு ஒரு ஆளுநரை கொண்டு தமிழ்நாட்டில் நாம் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறோம் என்று பேசினார்.

முன்னதாக, சுரண்டை நகராட்சியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஈ.ராஜா எம்.எல்.ஏ., தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ராணி ஸ்ரீ குமார், முன்னாள் அமைச்சரும், சுற்றுச்சூழல் அணி தலைவருமான பூங்கோதை ஆலடி அருணா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், தென்காசி தெற்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளர்கள் கென்னடி, கனிமொழி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் ராஜன் ஜான் தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









