திமுக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக நிற்கும்; கனிமொழி எம்.பி பேச்சு..

திமுக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக நிற்கும் என கனிமொழி எம்.பி உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவின் போது தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அமர் சேவா சங்கம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்ட விழா, கோவில்பட்டி ஆர்த்தி மஹாலில் இன்று (28/12/2024) நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி, மாற்றுத் திறன் படைத்த ஒவ்வொருவருக்கும் தனித் திறமைகள் உண்டு என்பதை உணர்ந்து தான் மாற்றுத் திறனாளிகள் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பெயர் சூட்டினார். அது மட்டுமல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு என்று ஒரு துறையை உருவாக்கி, அந்தத் துறையை அவர் கையில் வைத்துக் கொண்டார். அதே போன்று தான், திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மாற்றுத் திறனாளி துறையைத் தனது கையில் வைத்துக் கொண்டு அவர்கள் கேட்கும் அனைத்து உதவிகளையும், பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக அரசு நிறைவேற்றி வருகிறது. திமுகவும், திமுக அரசும் மாற்றுத் திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

 

இந்த விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகராட்சி மன்றத்‌ தலைவர் கா.கருணாநிதி, ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் செயலாளர் சங்கர ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா முடித்த பிறகு செய்தியாளர்களைக் கனிமொழி எம்.பி சந்தித்து பேசினார். அப்போது, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடைபெற்றது எல்லோருக்கும் வருத்தம் தரக்கூடிய ஒன்று. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது‌ என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

 

ஆனால், எதிர்க்கட்சிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் ஆக்காமல், அந்தப் பெண்ணின் எதிர் காலத்தைப் பற்றி ஒரு அக்கறை இருக்க வேண்டும். சில பேர் அரசியலுக்காக முதல் தகவல் அறிக்கையை (FIR) வெளியிடுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு மிகப்பெரிய குற்றம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதைத் தாண்டி, முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உடனே, குற்றவாளியைக் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அடுத்த கட்டமாக அந்த பெண்ணிற்கு நியாயம் கிடைக்கும் வகையில் குற்றவாளிக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் . இதை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். நடவடிக்கை எடுத்த பிறகு போராட்டம் நடத்தி என்ன பயன் என்று பேசினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!