கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கண்டிப்பாக சிபிஐ விசாரணை வேண்டும்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்தும், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை ராஜரத்தினம் அரங்கம் முன்பு அதிமுக சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.ல்.ஏக்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாலை 5மணி அளவில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை எடப்பாடி பழனிசாமி முடித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்துஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
விழுப்புரம், செங்கல்பட்டில் ஏற்கெனவே கள்ளச்சாரயம் அருந்தி 22 பேர் உயிரிழந்தனர். அப்பொழுதே நடிவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இவ்வளவு உயிர்களை இழந்திருக்க மாட்டோம்.கள்ளக்குறிச்சி பிரச்னையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க சிபிசிஐடி-யை நியமித்து விட்டோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். அதனால் எந்த பயனும் இல்லை.
நடுநிலையோடு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தான் சிபிஐ விசாரணை கேட்கிறோம். உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை கண்டிப்பாக வேண்டும். இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் கண்பார்வையை இழந்துள்ளனர். இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். எதிர்கட்சியை ஒடுக்க முயல்கின்றனர். போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்க மறுத்தனர். இரவு 9 மணிக்கு 23 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்தனர்.
அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி சுதந்திரமாக செயல்பட்டது. திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
You must be logged in to post a comment.