கடவுளே அஜித்தே’ என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது!- நடிகர் அஜித் குமார் கவலை..

பொதுவாக அஜித் படங்களோ அல்லது அஜித் படங்கள் குறித்த அப்டேட்டோ வெளிவருவதற்கு தாமதமாகும் போது, அவருடைய ரசிகர்கள் ‘அப்டேட்’ கேட்டு அலப்பறையைக் கொடுப்பதை தொடர்ந்து செய்துவருகின்றனர். வலிமை படத்தின்போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடம் கூட அப்டேட் கேட்டதையெல்லாம் நம்மால் மறந்துவிட முடியாது.

இப்படி பல்வேறு அலப்பறைகளை கொடுத்துக்கொண்டிருக்கும் அஜித் ரசிகர்கள் தற்போது கையில் எடுத்திருக்கும் கோஷம்தான் ‘கடவுளே அஜித்தே’. விடாமுயற்சி படத்துக்காக புது ஸ்டைலை பின்பற்றத் தொடங்கியிருக்கும் அவர்கள், தியேட்டர்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் சம்பந்தமே இல்லாமல் ‘கடவுளே அஜித்தே…’ எனக் கும்பலாகக் கூச்சலிட்டு சத்தமெழுப்புவதை வாடிக்கையாக வைத்துவருகின்றனர்.

இது நாளுக்கு நாள் அதிகமாகி சமீபத்தில் முக்கியமான நிகழ்வுகளில் கூட அரங்கேறிவருகிறது. இது ஒருபுறம் அஜித் ரசிகர்கள் அஜித்தின் மேல் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் பொதுவெளியில் அநாகரிகமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தெரிந்துகொண்டுள்ள நடிகர் அஜித் குமார், தற்போது கடவுளே அஜித்தே என்ற கோஷத்தை எழுப்ப வேண்டாம் என தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு முன் ’தல’ என தன்னை அழைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது கடவுளே அஜித்தே என்பதையும் மறுத்துள்ளார் அஜித் குமார்.

கடவுளே அஜித்தே கோஷம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அஜித், “சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரிமாக தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க… அஜித்தே’ என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசெளகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!” என்று ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!