கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது.
இந்த விபத்தில், திராவிட மணி மகள் சாருமதி (16), விஜயசந்திரகுமார் மகன் விமலேஷ்(10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், ஓட்டுநர் சங்கர் (47), தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த விஷ்வேஸ் (16), நிவாஸ் (13), சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த செழியன் (15) ஆகியோர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது சிகிச்சைப் பலனின்றி செழியன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே பலியான சாருமதியும் செழியனும் சகோதர சகோதரி ஆவர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, விபத்தை பார்க்கவந்த அண்ணாதுரை (55) என்பவர் மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிவாரணமாக தலா ரூ. 5 லட்சம் அறிவித்துள்ளார். அதேபோல், ரயில்வே தரப்பிலும் ரூ. 5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.