ஜாபர் சாதிக்கிற்கு நான் விருது அளித்ததாகக் கூறப்படுவது தவறு. நான் கொடுத்தது வெறும் பரிசுப்பொருள்தான்!- டி.ஜி.பி சங்கர் ஜிவால் விளக்கம்..

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக்குடன், தமிழக காவல்துறைத் தலைவர் டி.ஜி.பி சங்கர் ஜிவால் ஒரு புகைப்படத்தில் இணைந்து காணப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்தப்படம் குறித்து டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

விமான நிலையங்கள் மூலமாக அவர் தப்பிவிடக்கூடாது என்பதால் தேடப்படும் குற்றவாளி என்பதற்கான ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

ஜாபர் சாதிக்கிற்கு தாம் விருது எதுவும் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒருமுறை பரிசுப்பொருள் மட்டும் கொடுத்ததாக தமது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக், தாம் சென்னை காவல் ஆணையராக இருந்தபோது ரகசிய கண்காணிப்புக் கேமராக்களை காவல்துறைக்கு சொந்த செலவில் வாங்கிக் கொடுத்ததாக டி.ஜி.பி. கூறியுள்ளார்.

எனினும் ஜாபர் சாதிக் குற்றவாளி எனத் தெரிய வந்ததும் அந்தக் கேமராக்களை உடனடியாக அகற்றி விட்டதாகவும், குறிப்பிட்ட அந்தப் புகைப்படத்தில் ஜாபர் சாதிக் இருப்பது உண்மைதான் என்றும் டிஜிபி அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவருக்கு நான் விருது அளித்ததாகக் கூறப்படுவது தவறு. நான் கொடுத்தது வெறும் பரிசுப்பொருள்தான்,” என்று டி.ஜி.பி சங்கர் ஜிவால் மேலும் தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!